ஓசூர் அருகே மைதானத்தில் வாலிபர் மர்ம மரணம் - மத்திகிரி போலீசார் தீவிர விசாரணை
கிருஷ்ணகிரி, 28 அக்டோபர் (ஹி.ச.) கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே திறந்தவெளி மைதானத்தில் இளைஞர் ஒருவர் மூக்கு மற்றும் காதில் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து மத்திகிரி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த
Hosur


கிருஷ்ணகிரி, 28 அக்டோபர் (ஹி.ச.)

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே திறந்தவெளி மைதானத்தில் இளைஞர் ஒருவர் மூக்கு மற்றும் காதில் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து மத்திகிரி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஓசூர் உட்கோட்டம் மத்திகிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காடிபாளையத்தைச் சேர்ந்த திவாகர் ராவ் என்பவரது மகன் பிரவீன்குமார் (28). இவர் கடந்த சில ஆண்டுகளாக ஒன்னல்வாடி பகுதியில் வசித்து வந்தார்.

குடும்பத் தகராறு காரணமாக கடந்த மூன்று ஆண்டுகளாக தனது மனைவி சசிரேகாவை பிரிந்து வாழ்ந்து வந்த பிரவீன்குமார், அந்திவாடி திறந்தவெளி மைதானம் அருகே உள்ள வாடகை வீட்டில் தனியாக தங்கி வந்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று வீட்டிலிருந்து புறப்பட்டுச் சென்ற பிரவீன்குமார் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் பதற்றமடைந்த அவரது தந்தை திவாகர் ராவ், மகனை பல்வேறு இடங்களில் தேடி வந்துள்ளார்.

இரவு, அந்திவாடி மைதானத்தில் பிரவீன்குமார் மூக்கு மற்றும் காதுகளில் பலத்த ரத்தக் காயங்களுடன் மர்மமான முறையில் உயிரிழந்து கிடப்பதைக் கண்டு அவரது தந்தை அதிர்ச்சியடைந்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மத்திகிரி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான போலீசார், பிரவீன்குமாரின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஓசூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்த பிரவீன்குமார் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மத்திகிரியைச் சேர்ந்த ‘ஜிம்’ கணேஷ் என்பவரிடம் பணம் கடன் வாங்கியிருந்ததாகத் தெரியவந்துள்ளது.

இதன் காரணமாக ஏற்பட்ட முன்விரோதத்தில் இவர் தாக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டிருக்கலாமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தலைமறைவாக உள்ள ஜிம் கணேஷை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Hindusthan Samachar / ANANDHAN