ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகப் பதிவாளர் மாற்றம் – அறப்போர் இயக்கம் அளித்த புகாரின் எதிரொலி எனத் தகவல்!
சென்னை, 28 அக்டோபர் (ஹி.ச.) தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் மாற்றப்பட்டுள்ள நிலையில், ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளின் இணைவு ஆய்வுகளில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து அளித்த புகாரை முழுமையாக விசாரிக்க வேண்டும
பல்கலை.


சென்னை, 28 அக்டோபர் (ஹி.ச.)

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் மாற்றப்பட்டுள்ள நிலையில், ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளின் இணைவு ஆய்வுகளில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து அளித்த புகாரை முழுமையாக விசாரிக்க வேண்டும் என அறப்போர் இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளின் இணைவு ஆய்வுகளில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாகக் கூறி, அறப்போர் இயக்கம் கடந்த அக்டோபர் 1-ஆம் தேதி தமிழக அரசிடம் விரிவான புகார் அளித்திருந்தது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்ததில், 2023–24 மற்றும் 2024–25 கல்வியாண்டுகளுக்கான இணைவு ஆய்வுகளில் பல்வேறு முரண்பாடுகள் கண்டறியப்பட்டதாக அறப்போர் இயக்கம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக, ஒரே நாளில் வெவ்வேறு மாவட்டங்களில் அமைந்துள்ள பல கல்லூரிகளில் நேரில் ஆய்வு செய்ததாகப் பதிவுகள் இருப்பதும், சில பேராசிரியர்கள் வெவ்வேறு கல்லூரிகளில் ஒரே நேரத்தில் முதல்வர்களாகப் பதிவாகியிருப்பதும் புகாரில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாகவும் அறப்போர் இயக்கம் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில், அக்டோபர் 26-ஆம் தேதியிட்ட தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, பதிவாளர் பொறுப்பிலிருந்த டாக்டர் கே. இராஜசேகரன் விடுவிக்கப்பட்டு, பேராசிரியர் எம். கண்மணி பொறுப்புப் பதிவாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த மாற்றத்தை வரவேற்றுள்ள அறப்போர் இயக்கம், தாங்கள் அளித்த புகாரின் அடிப்படையில்தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என உறுதிப்படுத்தப்படாத நிலையில், புகாரில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து முழுமையான, வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

மேலும், இணைவு ஆய்வுகளில் முறைகேடுகள் நடைபெற்றது உறுதி செய்யப்பட்டால், அதில் தொடர்புடைய கல்லூரி நிர்வாகங்கள் மற்றும் போலியான பேராசிரியர் விவரங்களைச் சரிபார்க்காமல் அங்கீகரித்த குழுவினர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரியுள்ளது.

இதுதவிர, இணைவு அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்களின் புகைப்படத்துடன் கூடிய முழு விவரங்களைப் பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிட வேண்டும்,ஒழுங்கற்ற வகுப்புகள் நடத்தப்படுவதைத் தடுக்க வேண்டும்,அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைமுறையில் இருப்பதைப் போல, இணைவு பெற்ற கல்லூரிப் பேராசிரியர்களுக்கு மாதந்தோறும் இணையவழி ஆதார் அடிப்படையிலான பயோமெட்ரிக் வருகைப் பதிவு முறையை அமல்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

மேலும், பல்கலைக்கழகச் சிண்டிகேட் கூட்டங்களில் எடுக்கப்படும் தீர்மானங்களை இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்றும் அறப்போர் இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

ஆசிரியர்களை உருவாக்கும் கல்வி நிறுவனங்களின் தரத்தையும் நம்பகத்தன்மையையும் பாதுகாப்பது பல்கலைக்கழகம் மற்றும் அரசின் கடமை எனக் குறிப்பிட்டுள்ள அறப்போர் இயக்கம், இந்த விவகாரத்தில் விசாரணையின் நிலை மற்றும் அதன் முடிவுகளை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என

வலியுறுத்தியுள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam