Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 28 அக்டோபர் (ஹி.ச.)
தமிழக அரசுத் துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் வெளிமுகமை (அவுட்சோர்சிங்) முறையில் பணியாளர்களை நியமிப்பதற்கான பொறுப்பை, சென்னை அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்திடம் ஒப்படைத்து தமிழ்நாடு அரசு அரசிதழ் வெளியிட்டுள்ளது.
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் இதுவரை வெளிமுகமை முறையில் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.
இதற்காக சம்பந்தப்பட்ட துறைகளே ஒப்பந்தப்புள்ளிகளைக் கோரி, ஒப்பந்த நிறுவனங்கள் மூலம் பணியாளர்களை நியமித்து வந்தன.
இந்நிலையில், இந்த நடைமுறையில் மாற்றம் கொண்டு வரும் வகையில், அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு வெளிமுகமை முறையில் பணியாளர்களை நியமிக்கும் பொறுப்பைச் சென்னை அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்திடம் வழங்கி தமிழக அரசு அரசிதழ் வெளியிட்டுள்ளது.
இதன்படி, அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம், தமிழக அரசின் மின்னணு கொள்முதல் இணையதளம் வாயிலாக ஒப்பந்ததாரர்களைக் கண்டறிந்து, அவர்களின் மூலம் பணியாளர்களை நியமிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.
இதன் மூலம் அரசுத் துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் வெளிமுகமை முறையில் பணியாளர்களை நியமிக்க வேண்டியிருந்தால், அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தை அணுக வேண்டும் என அரசின் புதிய உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam