தேனி சிறையிலிருந்து தப்பிய மேலும் 2 கைதிகள் கைது - எஞ்சிய இருவரை தேடும் பணி தீவிரம்
தேனி, 28 அக்டோபர் (ஹி.ச.) தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே தேக்கம்பட்டியில் மாவட்ட சிறைச்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு ஒரே அறையில் அடைக்கப்பட்டிருந்த 17 கைதிகள், திங்கள்கிழமை இரவு காவலர்களைத் தாக்கிவிட்டு சிறையிலிருந்து தப்பிச் சென்றனர். இதையட
Theni


தேனி, 28 அக்டோபர் (ஹி.ச.)

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே தேக்கம்பட்டியில் மாவட்ட சிறைச்சாலை செயல்பட்டு வருகிறது.

இங்கு ஒரே அறையில் அடைக்கப்பட்டிருந்த 17 கைதிகள், திங்கள்கிழமை இரவு காவலர்களைத் தாக்கிவிட்டு சிறையிலிருந்து தப்பிச் சென்றனர்.

இதையடுத்து, தப்பியோடிய கைதிகளைப் பிடிக்க காவல்துறை சார்பில் 17 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் பணி மேற்கொள்ளப்பட்டது.

முதற்கட்டமாக 4 கைதிகள் காவல்துறையினரால் மீண்டும் கைது செய்யப்பட்டனர்.

மேலும், தப்பிச் சென்ற மாற்றுத்திறனாளி கைதி ஒருவர் ஆட்டோவில் தப்பிக்க முயன்றபோது, அவரை ஆட்டோ ஓட்டுநர் காவலர்களிடம் ஒப்படைத்தார்.

தொடர்ந்து, மலைப்பகுதியில் பதுங்கியிருந்த கைதிகளை ட்ரோன் மூலம் கண்காணித்த காவல்துறையினர், அவர்களைச் சுற்றிவளைத்துப் பிடித்தனர். இதன் மூலம் மேலும் 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, தேனிக்கு வந்த சிறைத்துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர், சிறைச்சாலையில் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

தப்பியோடிய 17 கைதிகளில் இதுவரை 13 பேர் பிடிபட்டுள்ள நிலையில், மீதமுள்ள 4 பேரும் வனப்பகுதியில் பதுங்கியிருக்கலாம் எனக் கருதி தேடுதல் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

துப்பாக்கி ஏந்திய 12 காவலர்கள் இரு குழுக்களாகப் பிரிந்து வனப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மீதமிருந்த 4 கைதிகளில், பொன் முத்துசெல்வம் மற்றும் ரெஜின் ஆகிய இருவரும் தற்போது அமச்சியாபுரம் மலைப்பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதையடுத்து, தப்பியோடிய 17 கைதிகளில் இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எஞ்சியுள்ள மீனாட்சிசுந்தரம் மற்றும் அவரது சகோதரர் திருப்பதி ஆகிய இருவரையும் பிடிக்கக் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Hindusthan Samachar / ANANDHAN