சென்னை பெருங்குடியில் ஷண்முக பிரியா வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை
சென்னை, 28 அக்டோபர் (ஹி.ச.) சென்னை பெருங்குடி, அம்பேத்கர் நகர், பெருந்தலைவர் காமராஜர் நகரில் அமைந்துள்ள ராம்ஸ் ராகஸ்ரீ வில்லாஸ் என்ற தனியார் அடுக்குமாடிக் குடியிருப்பில் ஷண்முக பிரியா வசித்து வருகிறார். அவரது வீட்டில் இன்று காலை முதல் மத்திய குற்ற
Anbil mahesh


சென்னை, 28 அக்டோபர் (ஹி.ச.)

சென்னை பெருங்குடி, அம்பேத்கர் நகர், பெருந்தலைவர் காமராஜர் நகரில் அமைந்துள்ள ராம்ஸ் ராகஸ்ரீ வில்லாஸ் என்ற தனியார் அடுக்குமாடிக் குடியிருப்பில் ஷண்முக பிரியா வசித்து வருகிறார். அவரது வீட்டில் இன்று காலை முதல் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

காலை 11.45 மணி முதல் சோதனை நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. சுமார் 10 பேர் கொண்ட போலீஸ் அதிகாரிகள் குழுவினர் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடர்பான வழக்கின் விசாரணையின் ஒரு பகுதியாக, ஷண்முக பிரியாவின் வீட்டில் சோதனை நடைபெறுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மத்திய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான போலீசார் இந்தச் சோதனையை மேற்கொண்டு வருகின்றனர். வீட்டில் உள்ள ஆவணங்கள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்வதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது.

அன்பில் மகேஷ் தொடர்பான வழக்கில் போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், தற்போது பெருங்குடியில் நடத்தப்பட்டு வரும் இந்தச் சோதனை கவனம் பெற்றுள்ளது.

இருப்பினும், சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், பணப் பரிவர்த்தனைகள் தொடர்பான விவரங்கள் அல்லது இந்த வழக்கில் ஷண்முக பிரியாவுக்கு உள்ள தொடர்பு குறித்து தகவல்கள் குறித்து போலீசார் வெளியிடவில்லை.

எனவே போலீசாரின் சோதனை நிறைவடைந்த பின்னரே, இந்த நடவடிக்கை தொடர்பான கூடுதல் விவரங்கள் தெரியவரும் என சொல்லப்படுகிறது.

Hindusthan Samachar / LOGESHWARI V