Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 28 அக்டோபர் (ஹி.ச.)
கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராகப் பதவி வகித்த அன்பில் மகேஷ் பொய்யாமொழி மீது, தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் பெற்றுத் தருதல், பள்ளிகளின் தரத்தை உயர்த்துவதற்கான அனுமதிகள் மற்றும் பல்வேறு சட்டப்பூர்வ ஒப்புதல்களைப் பெற்றுத் தருவதாகக் கூறி கோடிக்கணக்கில் பணம் வசூலித்ததாகப் புகார் எழுந்தது.
இந்தப் புகார் தொடர்பாகச் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
வழக்கில் ஏற்கெனவே கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணை மற்றும் பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில், அன்பில் மகேஷிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி அன்பில் மகேஷ் தாக்கல் செய்த மனுவைச் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதைத்தொடர்ந்து, கடந்த 26-ஆம் தேதி மத்திய குற்றப்பிரிவு போலீசார் அவரைக் கைது செய்தனர்.
பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை, நவம்பர் 6-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அன்பில் மகேஷ் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த வழக்கில் பணம் வசூலிக்கப்பட்ட விதம், அதுதொடர்பான ஆவணங்கள், பணப் பரிவர்த்தனைகள் மற்றும் பணம் யார் யாருக்குச் சென்றது என்பது குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டியுள்ளதாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் கருதுகின்றனர்.
இதற்காக, அன்பில் மகேஷை 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி இன்று நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
நீதிமன்றம் அனுமதி அளித்தால், அவரிடம் நேரடியாக விசாரணை நடத்தி, வழக்கில் தொடர்புடைய பணப் பரிவர்த்தனைகள் மற்றும் பிற விவரங்கள் குறித்து கூடுதல் தகவல்களைச் சேகரிக்க போலீசார் நடவடிக்கை எடுக்க உள்ளனர்.
Hindusthan Samachar / LOGESHWARI V