ஆந்திராவில் கரையைக் கடந்த அர்னாப் புயல் -மணிக்கு 150 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று
சென்னை, 28 அக்டோபர் (ஹி.ச.) வங்கக்கடலில் உருவான அர்னாப் அதிதீவிரப் புயல், இன்று (அக். 28) காலை 8.30 மணியளவில் தீவிரப் புயலாக வலுவிழந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆந்திரப் பிரதேசம் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் ஏனாம்
Cyclone


சென்னை, 28 அக்டோபர் (ஹி.ச.)

வங்கக்கடலில் உருவான அர்னாப் அதிதீவிரப் புயல், இன்று (அக். 28) காலை 8.30 மணியளவில் தீவிரப் புயலாக வலுவிழந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆந்திரப் பிரதேசம் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் ஏனாம் பகுதிக்கு அருகே புயல் கரையைக் கடந்தபோது, மணிக்கு 150 கி.மீ. வேகம் வரை பலத்த காற்று வீசியது.

வங்கக்கடலில் உருவான அர்னாப் புயல் தீவிரமடைந்து அதிதீவிரப் புயலாக வலுப்பெற்றது. இதனால் ஆந்திரப் பிரதேசத்தின் கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று மற்றும் கனமழை ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இன்று அதிகாலை 2 மணி முதல் காலை 8 மணி வரையிலான காலகட்டத்தில், ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஏனாம் கடலோரப் பகுதிகளில் நரசாபூருக்கு அருகே புயல் கரையைக் கடந்தது.

அப்போது மணிக்கு 125 முதல் 135 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசியது. இடையிடையே காற்றின் வேகம் மணிக்கு 150 கி.மீ. வரை அதிகரித்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புயல் கரையைக் கடந்தபோது, அதன் மையப்பகுதி நரசாபூரிலிருந்து கிழக்கு-வடகிழக்கே சுமார் 20 கி.மீ. தொலைவிலும், ஏனாமிலிருந்து தென்மேற்கே 40 கி.மீ. தொலைவிலும், காக்கிநாடாவிலிருந்து தென்மேற்கே 60 கி.மீ. தொலைவிலும் இருந்ததாக வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

புயலின் மையப்பகுதி முழுமையாக நிலப்பரப்புக்குள் சென்றுவிட்டதால், கரையைக் கடக்கும் நிகழ்வு நிறைவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 8.30 மணி நிலவரப்படி வெளியிடப்பட்ட 14-வது மணிநேர வானிலை அறிக்கையில், அர்னாப் அதிதீவிரப் புயல் வலுவிழந்து தீவிரப் புயலாக மாறியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புயல் கரையைக் கடந்துள்ள நிலையில், அதன் நகர்வு மற்றும் வலிமையில் ஏற்படும் மாற்றங்களை வானிலை ஆய்வு மையம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

மேலும் ஆந்திரக் கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று வீசுவதால் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / LOGESHWARI V