சின்ன நீலாங்கரையில் மீனவர்கள் வலை பின்னும் கூடம் திறப்பு -650 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர் ஆனந்த்
சென்னை, 28 அக்டோபர் (ஹி.ச.) சென்னை சின்ன நீலாங்கரை மீனவர் கிராமத்தில் மீனவர்களின் பயன்பாட்டிற்காக, தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த ஈஸ்வரன் என்பவர் ரூ.13 லட்சம் மதிப்பீட்டில் சிங்காரவேலர் மீனவர்கள் வலை பின்னும் கூடத்தைக் கட்டிக் கொடுத்துள்ளார். இ
Anand


சென்னை, 28 அக்டோபர் (ஹி.ச.)

சென்னை சின்ன நீலாங்கரை மீனவர் கிராமத்தில் மீனவர்களின் பயன்பாட்டிற்காக, தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த ஈஸ்வரன் என்பவர் ரூ.13 லட்சம் மதிப்பீட்டில் சிங்காரவேலர் மீனவர்கள் வலை பின்னும் கூடத்தைக் கட்டிக் கொடுத்துள்ளார்.

இந்தக் கட்டிடத்தின் திறப்பு விழா நடைபெற்றது. இதில் ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் என். ஆனந்த் கலந்துகொண்டு, ரிப்பன் வெட்டிக் கட்டிடத்தைத் திறந்து வைத்தார்.

இதையடுத்து, அப்பகுதியைச் சேர்ந்த 650 மீனவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

முன்னதாக, நிகழ்ச்சிக்கு வருகை தந்த அமைச்சர் என். ஆனந்துக்கு மீனவர்கள் சார்பில் சிறிய படகு பரிசாக வழங்கப்பட்டது.

தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் என். ஆனந்த், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் தளபதிக்கு மக்கள் வாக்களித்துள்ளதாகவும், ஒவ்வொரு வாக்குக்கும் மதிப்பளித்து மக்களுக்காக உழைக்கத் தாங்கள் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும், மற்றவர்களுக்கு தலைவர் தளபதியின் முகத்தை முன்னிறுத்தி வாக்குகள் கிடைத்த நிலையில், சோழிங்கநல்லூர் தொகுதி எம்எல்ஏ ஈசிஆர் சரவணனுக்கு முதலமைச்சரே வாக்களித்து வெற்றி பெறச் செய்துள்ளதாகக் குறிப்பிட்டார். இந்த வாய்ப்பு அனைவருக்கும் கிடைக்காது என்றும் அவர் பேசினார்.

மக்களின் தேவைகளை அறிந்து செயல்படும் ஊழியர்களாக எப்போதும் இருப்போம் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

மீனவ சமுதாய மக்களின் தேவைகளை அறிந்து அவற்றை நிறைவேற்ற வேண்டியது தங்களின் பொறுப்பு என்று குறிப்பிட்ட அமைச்சர், அப்பகுதி மக்கள் தெரிவித்த ஊராட்சி நிர்வாகம் மற்றும் கால்வாய் தொடர்பான பிரச்சினைகள் குறித்தும் பேசினார்.

இந்தப் பிரச்சினைகள் தொடர்பாகச் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

இந்த நிகழ்ச்சியில் சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் ஈசிஆர் சரவணன், தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மற்றும் ஏராளமான மீனவர்கள் கலந்துகொண்டனர்.

Hindusthan Samachar / LOGESHWARI V