Enter your Email Address to subscribe to our newsletters

கடலூர், 28 அக்டோபர் (ஹி.ச.)
கடலூர் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் வட்டத்திற்கு உட்பட்ட ஏ.வள்ளியம் ஊராட்சியில் அமைந்துள்ள சக்கரமங்கலம் கிராமத்தில்
கடந்த மூன்று ஆண்டுகளாகச் சாலை மற்றும் மழைநீர் வடிகால் வசதிகள் முறையாக ஏற்படுத்தப்படவில்லை எனக் குற்றம்சாட்டியுள்ள கிராம மக்கள், அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
சக்கரமங்கலம் கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இப்பகுதியில் உள்ள தெருக்களில் போதிய சாலை வசதி இல்லாததால் பொதுமக்கள் அன்றாடம் சிரமங்களைச் சந்தித்து வருவதாகக் கூறப்படுகிறது.
குறிப்பாக, மழைக்காலங்களில் தெருக்களில் மழைநீர் தேங்கி நிற்பதால் சாலைகள் சேறும் சகதியுமாக மாறிவிடுகின்றன. இதனால் பொதுமக்கள் நடந்து செல்வதற்கும், அன்றாடப் பணிகளுக்காக வெளியே செல்வதற்கும் சிரமம் ஏற்படுவதாகத் தெரிவிக்கின்றனர்.
மழைநீர் தேங்குவதைத் தடுக்கும் வகையில் வடிகால் வசதியும் ஏற்படுத்தப்படவில்லை என அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதுதொடர்பாக ஸ்ரீமுஷ்ணம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலரிடம் பலமுறை மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பது கிராம மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.
மேலும், ஊராட்சியில் சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாகச் செயலாளராகப் பணியாற்றி வருவதாகக் கூறப்படும் முருகானந்தத்திடமும் பலமுறை புகார் தெரிவித்ததாக மக்கள் கூறுகின்றனர்.
இருப்பினும், தங்களது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு கிடைக்கவில்லை என்றும், பல்வேறு காரணங்கள் தெரிவிக்கப்பட்டு வருவதாகவும் அவர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.
தொடர்ந்து அடிப்படை வசதிகள் கிடைக்காததால் அதிருப்தியடைந்த கிராம மக்கள் ஒன்றுதிரண்டு, சேறும் சகதியுமாகக் காணப்பட்ட சாலையில் நாற்று நட்டு நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்தில் பெண்கள் முன்னின்று பங்கேற்று தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
சக்கரமங்கலம் கிராமத்தில் சாலை வசதியை மேம்படுத்தவும், மழைநீர் தேங்காமல் வெளியேறுவதற்கான வடிகால் வசதிகளை ஏற்படுத்தவும் மாவட்ட நிர்வாகம் உடனடியாகத் தலையிட வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தங்களது கோரிக்கைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படாவிட்டால் அடுத்தகட்டப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
Hindusthan Samachar / LOGESHWARI V