சாலையோரம் தூங்கியபோது மாயமான ஒரு வயது குழந்தை -ஆந்திராவில் பத்திரமாக மீட்பு
ராணிப்பேட்டை, 28 அக்டோபர் (ஹி.ச.) ராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட் அடுத்த லாலாப்பேட்டை பகுதியைச் சேர்ந்த நாடோடி தம்பதியினர் சேகர் (46), பிரேமா (23). இவர்கள் சாலையோரங்களில் பாட்டில்களைச் சேகரித்தும், யாசகம் பெற்றும் வாழ்க்கை நடத்தி வருகின்றனர். இவ
Kidnappe


ராணிப்பேட்டை, 28 அக்டோபர் (ஹி.ச.)

ராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட் அடுத்த லாலாப்பேட்டை பகுதியைச் சேர்ந்த நாடோடி தம்பதியினர் சேகர் (46), பிரேமா (23). இவர்கள் சாலையோரங்களில் பாட்டில்களைச் சேகரித்தும், யாசகம் பெற்றும் வாழ்க்கை நடத்தி வருகின்றனர்.

இவர்களுக்கு மகேஸ்வரி என்ற ஒரு வயது பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில், கடந்த செப்டம்பர் 23-ஆம் தேதி, சிப்காட் அருகே சாலையோரத்தில் குடும்பத்தினர் தூங்கிக் கொண்டிருந்தபோது குழந்தை மகேஸ்வரி திடீரென மாயமானதாகக் கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், குழந்தையைப் பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். ஆனால், குழந்தை கிடைக்காததால் சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த சிப்காட் போலீசார், குழந்தையைத் தேடும் பணியில் ஈடுபட்டனர்.

விசாரணையில் ஆரம்பத்தில் போதிய துப்பு கிடைக்காததால், ராணிப்பேட்டை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சிபின் உத்தரவின்பேரில் ஆறு தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு, குழந்தை மாயமான சம்பவத்தில் தொடர்புடையவர்களைக் கண்டறியும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

போலீசாரின் விசாரணையில், லாலாப்பேட்டை பகுதியைச் சேர்ந்த பூபதி (42), அவரது மனைவி கௌசல்யா (40) ஆகியோரின் தோழியான ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த மல்லேஸ்வரி (44) என்பவர் இந்தச் சம்பவத்தில் தொடர்புடையவர் என்பது தெரியவந்ததாகக் கூறப்படுகிறது.

மல்லேஸ்வரிக்குத் திருமணமாகி 24 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாத நிலையில், அவரது கணவர் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பே அவரைப் பிரிந்து சென்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையடுத்து, தனிமையில் வசித்து வந்த மல்லேஸ்வரிக்கு உதவும் நோக்கில், பூபதி மற்றும் கௌசல்யா தம்பதியினர் ஒரு வயது குழந்தையை யாருக்கும் தெரியாமல் எடுத்துச் சென்று அவரிடம் ஒப்படைத்ததாக போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, தனிப்படை போலீசார் ஆந்திர மாநிலத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர். அங்கு ஒரு அறையில் தங்கவைக்கப்பட்டிருந்த குழந்தை மகேஸ்வரியைப் பத்திரமாக மீட்டனர்.

இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய சந்தோஷ் (32), குமார் (30), பூபதி (42), கௌசல்யா (40), மல்லேஸ்வரி (44) ஆகிய ஐந்து பேரையும் போலீசார் இன்று அதிகாலை கைது செய்துள்ளனர்.

சாலையோரத்தில் பெற்றோருடன் தூங்கிக் கொண்டிருந்தபோது மாயமான ஒரு வயது குழந்தை, ஆந்திர மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குழந்தை மாயமானதற்கான முழுப் பின்னணி மற்றும் இந்தச் சம்பவத்தில் தொடர்புடையவர்களின் பங்கு குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Hindusthan Samachar / LOGESHWARI V