பேராசிரியர் கலையரசன் கைது விவகாரம்- தவெக அரசுக்கு கனிமொழி கண்டனம்
சென்னை, 29 அக்டோபர் (ஹி.ச.) சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் இணைப் பேராசிரியரும் பொருளாதார அறிஞருமான கலையரசனை அதிகாலையில் காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்ற விவகாரத்தில், திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. தவெக அரசுக்குக் கட
கனிமொழி


சென்னை, 29 அக்டோபர் (ஹி.ச.)

சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் இணைப் பேராசிரியரும் பொருளாதார அறிஞருமான கலையரசனை அதிகாலையில் காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்ற விவகாரத்தில், திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. தவெக அரசுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கலையரசன் சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் இணைப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

கடந்த 28-ஆம் தேதி அதிகாலை 5 மணியளவில் சென்னை அடையாறில் உள்ள அவரது வீட்டுக்குச் சாதாரண உடையில் வந்த மூன்று காவலர்கள், சமூக வலைத்தளத்தில் வெளியான அவதூறான கருத்து தொடர்பாக விசாரணைக்கு அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.

பல்லாவரம் தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினர் ஜெ. காமாட்சி தொடர்பான இன்ஸ்டாகிராம் பதிவில் அவதூறான கருத்து வெளியிடப்பட்டதாகக் கூறி விசாரணை நடத்தப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆனால், அந்த இன்ஸ்டாகிராம் கணக்கு தன்னுடையது அல்ல என்றும், தனது புகைப்படத்தைப் பயன்படுத்தி வேறு பெயரில் கணக்கு உருவாக்கப்பட்டுள்ளதாகவும் கலையரசன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாகத் தமிழகக் காவல்துறை தலைமை இயக்குநருக்கு அவர் புகார் கடிதம் அனுப்பியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தச் சம்பவத்தில் காவல்துறையின் நடவடிக்கை குறித்து கலையரசன் புகார் தெரிவித்துள்ள நிலையில், அவரை விசாரணைக்கு அழைத்துச் சென்றதற்கான காரணம் குறித்து காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளக் கணக்கில் அவரது பெயரும் புகைப்படமும் இருந்ததால் விசாரணைக்கு அழைத்ததாகவும், அந்தக் கணக்குடன் அவருக்குத் தொடர்பில்லை என்பது தெரியவந்ததும் வீட்டில் இறக்கிவிட்டதாகவும் காவல் ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக திமுக எம். பி. கனிமொழி அவரது எக்ஸ் பதிவில் கூறியதாவது;

கலையரசன் மீது பொய்க் குற்றச்சாட்டுகளை முன்வைத்து, அராஜகமான முறையில் கைது செய்து அலைக்கழித்து மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ள கனிமொழி, இதுபோன்ற நடவடிக்கைகள் அரசின் நிர்வாகச் சீர்கேடுகளை விமர்சிப்பவர்களை அச்சுறுத்தும் முயற்சியாகவே அமைவதாகத் தெரிவித்துள்ளார்.

விலைவாசி உயர்வு மற்றும் சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகள் உள்ளிட்ட விவகாரங்களில் அரசின் செயல்பாடுகளை விமர்சிப்பவர்கள் காவல்துறையின் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்படுவார்கள் என்ற மிரட்டலாகவே இந்தச் சம்பவம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அறிவுடைமையின் அருமையைப் புரிந்துகொள்ளாதவர்கள் நடத்தும் ஆட்சியில் கலைஞர்களும் கல்வியாளர்களும் வஞ்சிக்கப்படுவார்கள் என்றும், தவெக ஆட்சி அத்தகையதாகவே இருப்பதாகவும் கனிமொழி தனது எக்ஸ் தளப் பதிவில் விமர்சித்துள்ளார்.

Hindusthan Samachar / GOKILA arumugam