Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 29 அக்டோபர் (ஹி.ச.)
தமிழ்நாட்டில் சமூகநீதி சர்வே எனப்படும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கும், அதற்கான ஆணையத்தை அமைப்பதற்கும் அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வரவேற்றுள்ளார்.
மேலும், கணக்கெடுப்புக்கான அடிப்படை ஆயத்தப் பணிகளை விரைந்து முடித்து, சர்வேயைத் தொடங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
தமிழ்நாட்டில் 69 சதவீத இடஒதுக்கீட்டைப் பாதுகாப்பதற்காக சமூகநீதி சர்வே நடத்தப்பட வேண்டியது அவசியம் என்றும், இதற்கான நடவடிக்கைகள் பாமகவின் 47 ஆண்டுகாலக் கனவு என்றும் குறிப்பிட்டுள்ளார்.
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைத்த பின்னர், கடந்த மே 11ஆம் தேதி தனது இல்லத்திற்கு வந்த முதலமைச்சர் விஜய்யைச் சந்தித்தபோது, 69 சதவீத இடஒதுக்கீட்டைப் பாதுகாக்க சமூகநீதி சர்வே நடத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியதாக அன்புமணி தெரிவித்துள்ளார்.
இதன் தொடர்ச்சியாக, ஜூன் 5ஆம் தேதி சென்னையில் அனைத்துக் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகளின் தலைவர்கள் பங்கேற்ற கூட்டத்தைக் கூட்டி, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
தொடர்ந்து, ஜூன் 9ஆம் தேதி தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய்யைச் சந்தித்து, அனைத்துக் கட்சிக் கூட்டத்தின் முடிவுகளை எடுத்துரைத்ததுடன், சமூகநீதி சர்வே நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அப்போது, சமூகநீதி சர்வே நடத்துவது தங்களது கொள்கையும் தான் எனக் கூறிய முதலமைச்சர் விஜய், தமிழ்நாட்டில் கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று உறுதியளித்ததாகவும் அன்புமணி தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, ஆளுநர் உரையில் சமூகநீதி சர்வே நடத்துவது தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு, தற்போது அதற்கான ஆணையத்தை அமைக்கவும் ஒப்புதல் அளித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அமைச்சரவையின் இந்த முடிவு, 69 சதவீத இடஒதுக்கீட்டைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் சரியான பாதையில் செல்வதை உணர்த்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், சாதிவாரி கணக்கெடுப்புக்கான ஆணையத்தின் தலைவராக சமூகநீதியில் அக்கறை கொண்ட ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவரை நியமிக்க வேண்டும் என்றும், தேவையான முன்னேற்பாட்டுப் பணிகளை விரைந்து முடித்து கணக்கெடுப்பைத் தமிழக அரசு உடனடியாகத் தொடங்க வேண்டும் என்றும் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / GOKILA arumugam