Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 29 அக்டோபர் (ஹி.ச.)
தமிழ்நாடு அரசுத் துறைகளில் ஒப்பந்தப் பணியாளர்களை அவுட்சோர்சிங் முறையில் நியமிப்பது தொடர்பாக திமுக இரட்டை நிலைப்பாட்டைக் கடைப்பிடிப்பதாக தமிழக வெற்றிக் கழகம் குற்றம்சாட்டியுள்ளது.
இதுதொடர்பாக தவெக தனது எக்ஸ் தளப் பதிவில்,
தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளுக்குத் தேவையான ஒப்பந்தப் பணியாளர்களை அவுட்சோர்சிங் முறையில் தேர்வு செய்து வழங்க, தமிழக அரசின் கீழ் இயங்கும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனமான OMCL நியமிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
மேலும், திமுக ஆட்சிக் காலத்திலேயே OMCL நிறுவனம் மூலம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் பல்வேறு அரசுத் துறைகளுக்கு அவுட்சோர்சிங் முறையில் வழங்கப்பட்டதாகவும் தவெக தெரிவித்துள்ளது.
அப்போது நிதித்துறையின் உத்தரவின்படி, அரசுத் துறைகளின் பல்வேறு பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களை நியமிப்பதற்கான நிலையான விலை ஒப்பந்தம் (Standard Rate Contract) இறுதி செய்யப்பட்டதாகவும், அதன் முதற்கட்டமாகச் சென்னை உள்ளிட்ட பகுதிகளையும் பிற மண்டலங்களையும் சேர்ந்த 21 மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டதாகவும் அந்தப் பதிவில் கூறப்பட்டுள்ளது.
திமுக ஆட்சிக் காலத்திலேயே நடைமுறையில் இருந்த இந்த முறையை மறைத்துவிட்டு, தற்போதைய தவெக அரசின் நடவடிக்கையை மட்டும் விமர்சிப்பதாக திமுகவினர் மீது குற்றம்சாட்டியுள்ள தவெக, இதனை அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் செய்யப்படும் விமர்சனம் என்றும் குறிப்பிட்டுள்ளது.
அதேவேளையில், இளைஞர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தில் 8,000 பணியிடங்களைத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நேரடி நியமனம் செய்ய அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாகவும் தவெக சுட்டிக்காட்டியுள்ளது.
இளைஞர்களின் வேலைவாய்ப்புக்கு முக்கியத்துவம் அளித்து நேரடி நியமனங்களை மேற்கொள்வதே தவெக அரசின் நோக்கம் என்றும் அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam