கும்பகோணத்தில் சமூக ஆர்வலர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்- ஐபிஎஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை
கும்பகோணம், 29 அக்டோபர் (ஹி.ச.) கும்பகோணம் காந்தி பூங்கா முன்பு பல்வேறு பொதுமக்கள் நலக் கோரிக்கைகளை வலியுறுத்தி சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுநல அமைப்பினர் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சமுதாய விழிப்புணர்வு இயக்கத்தின் மாநிலத் தலைவ
Protest


கும்பகோணம், 29 அக்டோபர் (ஹி.ச.)

கும்பகோணம் காந்தி பூங்கா முன்பு பல்வேறு பொதுமக்கள் நலக் கோரிக்கைகளை வலியுறுத்தி சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுநல அமைப்பினர் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சமுதாய விழிப்புணர்வு இயக்கத்தின் மாநிலத் தலைவர் வழக்கறிஞர் எம். கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், அரசு மருத்துவமனையில் காலிப் பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

ஆர்ப்பாட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி, தொழிலதிபர் ஜெம் வீரமணி தொடர்பான பாலியல் வன்முறை புகாரில் உரிய நடவடிக்கை எடுக்கத் தாமதம் ஏற்பட்டதாகக் குற்றம்சாட்டினார்.

இந்த விவகாரத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் ஐபிஎஸ் அதிகாரி அருணை காத்திருப்போர் பட்டியலில் வைப்பதற்குப் பதிலாக, பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

மேலும், இந்த வழக்கில் தமிழக முதலமைச்சர் விஜய் நேரடியாகத் தலையிட்டு நடவடிக்கை மேற்கொண்டதால்தான் ஜெம் வீரமணி கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அரசு வழக்கறிஞர்களின் செயல்பாடுகள் குறித்தும், தமிழக உளவுத்துறையின் செயல்பாடுகள் குறித்தும் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தார்.

வழக்கறிஞர் பூபாலன் தொடர்பாகக் கூறப்படும் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் பதுக்கல் விவகாரத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், கும்பகோணம் பகுதியில் நீர்நிலை ஆக்கிரமிப்புகள் தொடர்பான நீதிமன்ற உத்தரவுகள் முறையாகச் செயல்படுத்தப்படவில்லை எனக் குற்றம்சாட்டி, ஆக்கிரமிப்புகளை அகற்றி நீர்வழித்தடங்களில் தண்ணீர் தடையின்றிச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

கும்பகோணம் மாநகரில் சொத்து ஆவணங்களில் உள்ள பிழைகளைத் திருத்துவதற்காகச் செயல்பட்டு வந்த மாநகர நிலவரி திட்டத் தனி வட்டாட்சியர் அலுவலகத்தை மீண்டும் திறக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

மேலும், அரசு விதிகளின்படி ஒரே இடத்தில் மூன்று ஆண்டுகளுக்கு மேலாகப் பணியாற்றும் அரசு ஊழியர்களைப் பணியிட மாற்றம் செய்ய வேண்டும், மின் கணக்கீட்டை மாதந்தோறும் மேற்கொள்ள வேண்டும், புதிய பேருந்து நிலையத்தை விரிவுபடுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

முதியோர் மற்றும் விதவை உதவித்தொகைகளைத் தாமதமின்றி வழங்க வேண்டும், பொதுமக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் இடையூறு ஏற்படுத்தும் தற்காலிகக் கடைகள் குறித்து ஆய்வு செய்து மாநகராட்சி மற்றும் காவல்துறை இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

கும்பகோணம் அரசு மாவட்டத் தலைமை மருத்துவமனையில் காலியாக உள்ள பணியிடங்களை விரைந்து நிரப்பி, நோயாளிகளுக்குத் தரமான சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

Hindusthan Samachar / LOGESHWARI V