Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 29 அக்டோபர் (ஹி.ச.)
முன்னாள் அமைச்சர் கே.என். நேரு மீதான பணி நியமன முறைகேடு புகார் தொடர்பாக, திருச்சி மற்றும் சென்னையில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
2,538 பணியிடங்களுக்கான நியமனங்களில் 634 கோடி ரூபாய் லஞ்சம் பெறப்பட்டதாக அமலாக்கத்துறை குற்றச்சாட்டு முன்வைத்திருந்தது.
வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டதை எதிர்த்து நேரு தாக்கல் செய்த மறுஆய்வு மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்நிலையில் திருச்சியில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதற்கு திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பெண்கள், குழந்தைகள், முதியோர் என யாருமே பாதுகாப்பாக இல்லாத மாநிலமாகத் தமிழ்நாட்டை மாற்றிவிட்ட முதலமைச்சர், மக்களின் கவனத்தையும் - ஊடகங்களின் Breaking News-ஐயும் திசைதிருப்ப Roadshow நடத்தலாமா? Raidshow நடத்தலாமா? எனச் சிந்தித்துக் கொண்டிருக்கிறார்.
ஊழல் பெருச்சாளிகளை எல்லாம் பேரக் குதிரைகளாக மாற்றி தன் கட்சியில் இணைத்துக் கொண்டிருக்கும் த.வெ.க. எனும் “TN Branch Washing Machine”, தி.மு.க. ஆட்சியின் முன்னாள் அமைச்சர்களை மட்டும் குறிவைத்து நடத்திக் கொண்டிருக்கும் “Vettri Vendetta Politics” திட்டம், வழக்கம் போல் சட்டத்தின் முன் தோற்று, மக்கள் முன் தலைகுனிந்து நிற்கும்!
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலுக்கான ரீல்ஸ் விடியோக்களைத் தயாரிக்கவும் - முதலமைச்சர் மேடையில் punch dialogue என்ற பெயரில் பல modulation-இல் காட்டுக்கத்து கத்தவும் நடத்தப்படும் இந்த ரெய்டுகளைக் கண்டு தி.மு.க.வின் கடைக்கோடிக் தொண்டரின் கால் நகம் கூட அஞ்சாது!
சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, துருப்பிடித்துவிட்ட நிர்வாகம், வாட்டி வதைக்கும் விலைவாசி உயர்வு என மக்களை பாதித்துக் கொண்டிருக்கும் இந்த த.வெ.க. ஆட்சியைக் கண்டு, தமிழ்நாடு மட்டுமல்ல இந்திய நாடே எள்ளி நகைக்கிறது.
இதை எல்லாம் மறைக்க, தி.மு.க.வினருக்கு வாய்ப்பூட்டு போடலாம் என்று நினைக்கிறீர்கள்.
இனி இன்னும் இன்னும் வேகமாகத் த.வெ.க. அரசின் வண்டவாளங்களைத் தண்டவாளம் ஏற்றுவோம்!
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்
Hindusthan Samachar / LOGESHWARI V