Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 29 அக்டோபர் (ஹி.ச.)
தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் மற்றும் அரசு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி, பள்ளி நிர்வாகிகளிடம் பெரும் தொகை வசூலிக்கப்பட்டதாகப் புகார் எழுந்தது.
இந்த வழக்கில் திமுகவைச் சேர்ந்த முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த விவகாரத்தில் திமுக பிரமுகர் அரசக்குமாரும் ஏற்கெனவே கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.
இந்த வழக்கில் முன்னாள் எம்.எல்.ஏ. முத்துக்குமார் முக்கியக் குற்றச்சாட்டுக்கு உள்ளான நபராகக் குறிப்பிடப்பட்டு வந்தார்.
அவரைத் தேடி வந்த போலீசார், பணப் பரிவர்த்தனைகள் மற்றும் பள்ளி நிர்வாகிகளிடம் வசூலிக்கப்பட்டதாகக் கூறப்படும் தொகைகள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையே, கைது நடவடிக்கையிலிருந்து பாதுகாப்பு கோரி முத்துக்குமார் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் தீபாங்கர் தத்தா, ஷீல் நாகு ஆகியோர் அடங்கிய அமர்வு, அவரது முன்ஜாமீன் கோரிக்கையைத் தள்ளுபடி செய்தது
முத்துக்குமார் சரணடைந்ததைத் தொடர்ந்து, அவரை நவம்பர் 12ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து அவர் புழல் மத்திய சிறையில் அடைக்கப்படுகிறார்.
இந்த வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் பணப் பரிவர்த்தனைகள், பள்ளி நிர்வாகிகளிடமிருந்து வசூலிக்கப்பட்ட தொகைகள் மற்றும் பிற நபர்களின் தொடர்புகள் குறித்து போலீசார் விசாரணையைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
முத்துக்குமாரிடம் விசாரணை நடத்துவதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகளையும் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / LOGESHWARI V