நெல்லையில் சாக்கடை கால்வாயில் தொப்புள்கொடி அறுக்கப்படாத ஆண் குழந்தை சடலம் மீட்பு!
நெல்லை, 29 அக்டோபர் (ஹி.ச.) நெல்லையை அடுத்த தச்சநல்லூர் வாலாஜாபேட்டை நடுத்தெரு பகுதியில் இன்று காலை சாலையோர சாக்கடை கால்வாயில் குழந்தையின் உடல் கிடந்துள்ளது. அந்த வழியாகச் சென்ற பொதுமக்கள் இதைக் கண்டு அதிர்ச்சியடைந்து உடனடியாக போலீசாருக்குத் தகவ
Baby death


நெல்லை, 29 அக்டோபர் (ஹி.ச.)

நெல்லையை அடுத்த தச்சநல்லூர் வாலாஜாபேட்டை நடுத்தெரு பகுதியில் இன்று காலை சாலையோர சாக்கடை கால்வாயில் குழந்தையின் உடல் கிடந்துள்ளது.

அந்த வழியாகச் சென்ற பொதுமக்கள் இதைக் கண்டு அதிர்ச்சியடைந்து உடனடியாக போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தச்சநல்லூர் போலீசார், குழந்தையின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்.

குழந்தையின் உடல் அந்தப் பகுதியில் எப்படிக் கிடந்தது, யார் அங்கு கொண்டு வந்து போட்டுச் சென்றது என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, சம்பவம் நடந்த இடத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களின் (சிசிடிவி) காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

மேலும், அந்தப் பகுதியில் வசிக்கும் பொதுமக்களிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, குழந்தையின் உடலை ஏற்கெனவே பார்த்ததாகவும், அது பொம்மையாக இருக்கலாம் என நினைத்ததாகவும் சிலர் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

போலீசார் தெரிவித்த தகவலின்படி, குழந்தை பிறந்த உடனேயே கால்வாயில் வீசப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

சாக்கடை நீரில் கிடந்ததால் உடல் வீங்கிய நிலையில் இருந்ததாகவும், குழந்தையின் உடல் அங்கு கிடந்து சுமார் இரண்டு நாட்கள் ஆகியிருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இருப்பினும், குழந்தையின் இறப்புக்கான காரணம் மற்றும் இறந்த நேரம் ஆகியவை மருத்துவப் பரிசோதனை மற்றும் விசாரணைக்குப் பின்னரே உறுதியாகும்.

குழந்தை எங்கு பிறந்தது, யார் கால்வாயில் வீசிச் சென்றது, இந்தச் சம்பவத்துக்குப் பின்னால் வேறு காரணங்கள் உள்ளனவா என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.

குழந்தையின் அடையாளம், இறப்புக்கான காரணம் மற்றும் சம்பவத்தில் தொடர்புடையவர்களைக் கண்டறிய போலீசார் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

Hindusthan Samachar / LOGESHWARI V