Enter your Email Address to subscribe to our newsletters

ஒடிசா, 29 அக்டோபர் (ஹி.ச.)
ஒடிசா மாநிலத்தில் ‘அர்னாப்’ புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அம்மாநில முதல்வர் மோகன் சரண் மாஜி தொலைபேசியில் பேசியுள்ளார்..
அப்போது, புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நிலவும் தற்போதைய சூழல், மாநில அரசு மேற்கொண்டு வரும் நிவாரணப் பணிகள் மற்றும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இயல்பு நிலையை மீட்டெடுப்பதற்காக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து அமித் ஷாவிடம் அவர் விளக்கினார்.
இதுகுறித்து ஒடிசா முதல்வர் வெளியிட்டுள்ள பதிவில்,
புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை எதிர்கொள்ள ஒடிசா மாநிலத்திற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதியளித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், “மத்திய அரசின் ஆதரவும் ஒத்துழைப்பும், உயிர்களைக் காப்பாற்றவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவிகளை வழங்கவும், மாநிலம் முழுவதும் நிவாரணம், மறுவாழ்வு மற்றும் சீரமைப்புப் பணிகளை விரைவுபடுத்தவும் எங்களது முயற்சிகளுக்கு மேலும் வலுசேர்க்கும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
புயலால் பாதிக்கப்பட்ட மக்களைப் பாதுகாப்பதற்கும், அவர்களுக்குத் தேவையான உதவிகளை விரைந்து வழங்குவதற்கும் மாநில அரசு தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
முன்னதாக அமித்ஷா வெளியிட்டிருந்த எக்ஸ் தளப்பதிவில்., தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படை (SDRF) குழுக்கள் உடனடியாகக் களமிறங்கி, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன.
மேலும், புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை மதிப்பீடு செய்யவும், கூடுதல் உதவிகள் தேவைப்படுகிறதா என்பதை ஆய்வு செய்யவும் மத்திய அரசின் பல்துறை குழுக்கள் (IMCTs) விரைவில் அனுப்பப்பட உள்ளன.
பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உறுதுணையாக இருப்பதில் மத்திய அரசு உறுதியுடன் செயல்பட்டு வருவதாகவும் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / LOGESHWARI V