கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு - பேரணாம்பட்டு அருகே பொதுமக்கள் திடீர் சாலை மறியல்
வேலூர், 29 அக்டோபர் (ஹி.ச.) வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே உள்ள சின்னதாமல்செருவு ஊராட்சிக்கு உட்பட்ட 9 கிராமங்களில் சுமார் 5,000 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்தப் பகுதியில் தோல் தொழிற்சாலைக் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், வஜ்ஜிரம் தயா
Protest


வேலூர், 29 அக்டோபர் (ஹி.ச.)

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே உள்ள சின்னதாமல்செருவு ஊராட்சிக்கு உட்பட்ட 9 கிராமங்களில் சுமார் 5,000 குடும்பங்கள் வசித்து வருகின்றன.

இந்தப் பகுதியில் தோல் தொழிற்சாலைக் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், வஜ்ஜிரம் தயாரிக்கும் தொழிற்சாலை மற்றும் எலும்பு அரைக்கும் தொழிற்சாலைகள் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சாலைகள் செயல்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதாகவும், நிலத்தடி நீரின் தரம் குறைந்து குடிநீர் பயன்பாட்டில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

மேலும், விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளை எதிர்கொள்வதாகவும் அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

தங்களது பகுதியில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை மனுக்கள் அளித்தும் உரிய தீர்வு கிடைக்கவில்லை எனப் பொதுமக்கள் கூறுகின்றனர்.

இந்த நிலையில், சின்னதாமல்செருவு ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பேரணாம்பட்டு நகராட்சி சார்பில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகத் தகவல் வெளியானது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதி மக்கள், பேரணாம்பட்டில் இருந்து ஆம்பூர் செல்லும் சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர்.

சாலை மறியல் காரணமாக அந்த வழியாகச் சென்ற பேருந்துகள் மற்றும் பள்ளி வாகனங்கள் செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டன. இதுகுறித்து தகவல் அறிந்த பேரணாம்பட்டு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பொதுமக்களின் கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதியளித்ததைத் தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மறியலைக் கைவிட்டனர். இதையடுத்து அப்பகுதியில் நிலவிய போக்குவரத்து பாதிப்பு சீரானது.

கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பது தொடர்பாக பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொதுமக்களின் சுற்றுச்சூழல் மற்றும் குடிநீர் தொடர்பான புகார்கள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து தெளிவான விளக்கமளிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Hindusthan Samachar / LOGESHWARI V