Enter your Email Address to subscribe to our newsletters

திருவனந்தபுரம், 29 அக்டோபர் (ஹி.ச.)
எம்எல்சி தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடு குறித்துப் பேசிய கேரள பாஜக தலைவர் ராஜீவ் சந்திரசேகர், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் தோல்விகள் யாருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
ராகுல் காந்தியின் தலைமையிலான காங்கிரஸ் கட்சி, இமாச்சலப் பிரதேசம், தெலங்கானா, கர்நாடகா மற்றும் கேரளா போன்ற சில மாநிலங்களில் பெற்ற வெற்றிகளைத் தவிர, மற்ற தேர்தல்களில் தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்து வருகிறது.
2014, 2019, 2024 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல்களிலும், பல்வேறு சட்டமன்றத் தேர்தல்களிலும் காங்கிரஸ் தோல்வியடைந்துள்ளது. இந்த நிலை அடுத்த பல தசாப்தங்களுக்கும் தொடரும்.
நாட்டு மக்களும், பல்வேறு மாநில மக்களும் காங்கிரஸ் கட்சிக்கு ஆட்சி செய்யவும், தங்களது வாழ்க்கையில் மாற்றத்தைக் கொண்டுவரவும் வாய்ப்பளித்தனர்.
ஆனால், அந்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்குப் பதிலாக, காங்கிரஸ் ஆட்சி செய்யும் இடங்களில் பொருளாதாரத்தைச் சீரழித்து, ஊழலை உருவாக்கி, மக்களைச் சுரண்டுகிறது. பின்னர் பொய்யான வாக்குறுதிகளைக் கூறி மீண்டும் வாக்குகளைக் கேட்கிறது.
2004 முதல் 2014 வரையிலான காலகட்டத்தை இதற்கு உதாரணமாகக் கூறலாம். இந்த உண்மையை மக்கள் நன்கு புரிந்துகொண்டுள்ளனர்.
இது வாக்குத் திருட்டு தொடர்பான பிரச்சினை அல்ல. ஊழல் செய்பவர்களுக்கு இனி வாக்களிக்கக் கூடாது என்று மக்கள் முடிவெடுத்துள்ளனர். ஒவ்வொரு தேர்தலிலும் இந்தப் போக்கு வெளிப்பட்டு வருகிறது.
ராகுல் காந்தியும் மல்லிகார்ஜுன கார்கேவும் எதிர்கொள்ளும் விரக்திதான், அவர்களின் பொய்கள், அரசியல் மோசடிகள் மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிரான அவதூறுகள் மூலம் வெளிப்படுகிறது.
இந்தியாவின் எதிர்காலம் 'வளர்ச்சியடைந்த பாரதம்' என்பதுதான். மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் நாட்டின் எதிர்காலத்தையும் மேம்படுத்துவதற்காகத் தொடர்ந்து உழைக்கும் தலைவர் நரேந்திர மோடி மட்டுமே என்பதால், இந்திய மக்கள் அவருக்கு தொடர்ந்து ஆதரவளிப்பார்கள்.
காங்கிரஸ் கட்சியினர் நாட்டின் எதிர்காலத்தை மேம்படுத்துவதற்குப் பதிலாக, தங்களது உறவினர்களின் நலனில் மட்டுமே அக்கறை காட்டுகின்றனர்.
தேர்தல் தோல்விகளுக்கான உண்மையை ஏற்றுக்கொள்ள முடியாததால், அவர்கள் தொடர்ந்து பொய்களையும் மோசடி குற்றச்சாட்டுகளையும் முன்வைத்து வருகின்றனர்” என்று ராஜீவ் சந்திரசேகர் விமர்சித்தார்.
Hindusthan Samachar / LOGESHWARI V