Enter your Email Address to subscribe to our newsletters

திருவாரூர், 29 அக்டோபர் (ஹி.ச.)
திருவாரூர் மாவட்டத்தின் கோட்டூர், விக்கிரபாண்டியம், புழுதிக்குடி, விளக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிகாலை முதலே பனிமூட்டம் காணப்பட்டது.
காலை நேரம் கடந்தும் பனிமூட்டம் நீடித்ததால், சாலைகள் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகள் தெளிவாகத் தெரியாத நிலை ஏற்பட்டது.
கடும் பனிமூட்டம் காரணமாக சாலைகளில் எதிரே வரும் வாகனங்களைக் காண்பதில் சிரமம் ஏற்பட்டது.
இதனால் வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களின் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி பயணித்தனர்.
காலை நேரத்தில் வேலைக்குச் செல்வோர், அத்தியாவசியப் பணிகளுக்காக வெளியே சென்றவர்கள் மற்றும் பாதசாரிகள் பனிமூட்டத்தால் பாதிக்கப்பட்டனர்.
மேலும், அதிகாலை மற்றும் காலை நேரங்களில் நடைப்பயிற்சி மேற்கொள்வோர் வழக்கமான பயிற்சிகளை மேற்கொள்ளும்போது கூடுதல் கவனத்துடன் செல்ல வேண்டிய சூழல் நிலவியது.
சாலைகளில் பார்வைத்திறன் குறையும் நேரங்களில் வாகன ஓட்டிகள் வேகத்தைக் கட்டுப்படுத்தி, பாதுகாப்பாகப் பயணிப்பது அவசியமாகிறது.
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள நீர்நிலைகள் அடர்ந்த பனிமூட்டத்தால் சூழப்பட்டுக் காணப்பட்டன. ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளின் மேற்பரப்பிலும் சுற்றியுள்ள பகுதிகளிலும் பனிமூட்டம் பரவியதால், அவை முழுவதுமாக மறைந்ததுபோன்ற தோற்றம் ஏற்பட்டது.
திருவாரூர் மாவட்டத்தில் தற்போது சம்பா நெல் சாகுபடி நடைபெற்று வரும் விவசாய நிலங்களும் பனிமூட்டத்தால் சூழப்பட்டிருந்தன.
வயல்வெளிகள், நீர்நிலைகள் மற்றும் கிராமப்புறச் சாலைகள் எனப் பல பகுதிகளிலும் பனிமூட்டம் பரவியதால், காலை நேரத்தில் சுற்றுப்புறக் காட்சிகள் தெளிவின்றிக் காணப்பட்டன.
கனமழைக்குப் பிறகு தொடர்ந்து இரண்டாவது நாளாகப் பனிமூட்டம் நிலவியதால், மாவட்டத்தின் பல பகுதிகளில் காலை நேரச் சூழல் மாறுபட்டுக் காணப்பட்டது.
Hindusthan Samachar / LOGESHWARI V