காவல்துறையை நிர்வகிக்கத் தெரிந்த ஒருவரிடம் விஜய் ஒப்படைக்க வேண்டும் - கனிமொழி எம்.பி தாக்கு
சென்னை, 29 அக்டோபர் (ஹி.ச.) தூத்துக்குடி கந்தன் காலனி மேற்கு பகுதியைச் சேர்ந்தவர் சித்திரவேல். இவரது மனைவி சசிகலா. சித்திரவேல் கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் கூலி வேலை செய்து வருகிறார். இவர்களது மகன் நிரஞ்சன் குமாருக்குத் திருமணமாகி, அருகிலுள்ள பகு
Kanimozhi


சென்னை, 29 அக்டோபர் (ஹி.ச.)

தூத்துக்குடி கந்தன் காலனி மேற்கு பகுதியைச் சேர்ந்தவர் சித்திரவேல். இவரது மனைவி சசிகலா. சித்திரவேல் கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் கூலி வேலை செய்து வருகிறார்.

இவர்களது மகன் நிரஞ்சன் குமாருக்குத் திருமணமாகி, அருகிலுள்ள பகுதியில் தனியாக வசித்து வருகிறார்.

இந்நிலையில், சம்பவத்தன்று மதியம் சுமார் 3 மணியளவில் சசிகலா வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

அப்போது வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர், சசிகலாவின் தலை மற்றும் தோள்பட்டை பகுதியில் அரிவாளால் வெட்டிவிட்டுத் தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

சசிகலாவின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் அவரது மகன் நிரஞ்சன் குமாருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து வீட்டுக்கு வந்த அவர், தனது தாய் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

பின்னர், இது குறித்து தென்பாகம் காவல் நிலையத்துக்குத் தகவல் அளிக்கப்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தென்பாகம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத்தும் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினார்.

மேலும், தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. மோப்பநாய் தாமிராவும் வரவழைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.

சசிகலாவின் கழுத்தில் அணிந்திருந்த நான்கு பவுன் நகை காணாமல் போயிருந்ததாக அவரது மகன் நிரஞ்சன் குமார் போலீசாரிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, கொலைக்கான காரணம் மற்றும் நகை மாயமானது தொடர்பாக போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டனர்.

தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில், இந்தச் சம்பவத்தில் சசிகலாவின் உறவினரான விக்னேஷ் என்ற முனீஸுக்குத் தொடர்பு இருப்பது தெரியவந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, மூன்றாம் மைல் பகுதி அருகே பதுங்கியிருந்த அவரைப் போலீசார் கைது செய்தனர்.

மேலும், அவரிடமிருந்து சசிகலாவின் செயின் மற்றும் செல்போன் ஆகியவற்றைப் பறிமுதல் செய்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கு திமுக எம்.பி கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில்

நேற்றைய தினம் தூத்துக்குடி கந்தன் காலனியில், வீட்டில் தனியாக இருந்த சசிகலா என்ற பெண் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

நான்கு நாட்களில் ஏழு கொலைகள் எனத் தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து, மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

‘முத்துநகரம்’ என்று அழைக்கப்படும் தூத்துக்குடியை, ‘கொலை நகரம்’ என்று அழைக்கும் நிலைக்குக் கொண்டு செல்கிறது தவெக அரசு. மீண்டும் சொல்கிறேன்.

முதலமைச்சர்

விஜய் அவர்கள் மக்கள் மீது கருணை காட்டி, காவல்துறையை நிர்வகிக்கத் தெரிந்த ஒருவரிடம் அதன் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / LOGESHWARI V