உத்தரகாண்ட் மாநிலத்தில் இலக்கிய சுற்றுலாவை மேம்படுத்த 2 இலக்கிய கிராமங்கள் அமைப்பு - முதல்வர் புஷ்கர் சிங் தாமி
உத்தரக்காண்ட், 29 அக்டோபர் (ஹி.ச.) உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி, எதிர்காலத்தில் ‘எழுத்தாளர் கிராமம்’ (லேகக் காவ்ன்) கருத்துகளையும் சிந்தனைகளையும் உருவாக்கும் புனிதத் தலமாக மாறும் எ
Uthrakant


உத்தரக்காண்ட், 29 அக்டோபர் (ஹி.ச.)

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி, எதிர்காலத்தில் ‘எழுத்தாளர் கிராமம்’ (லேகக் காவ்ன்) கருத்துகளையும் சிந்தனைகளையும் உருவாக்கும் புனிதத் தலமாக மாறும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

வருங்காலங்களில் இந்த எழுத்தாளர் கிராமம், புதிய தலைமுறையினர் தங்களது சிந்தனைகளை வளர்த்துக்கொள்ளவும், இந்தியாவின் பழமையான மரபுகளையும் நவீன கண்ணோட்டத்தையும் இணைக்கும் முக்கியமான பணியை மேற்கொள்ளவும் உதவும் இடமாகத் திகழும்.

இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தின்போது எழுத்தாளர்கள், கவிஞர்கள் மற்றும் படைப்பாளிகள் தங்களது எழுத்துகள் மற்றும் படைப்புகள் மூலம் மக்களைச் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்கத் தூண்டினர். இதன் மூலம் விடுதலை இயக்கம் குறிப்பிடத்தக்க வேகத்தைப் பெற்றது.

அதேபோல், உத்தரகாண்ட் மாநிலம் உருவாவதற்கான இயக்கத்திலும் உள்ளூர் எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள், கவிஞர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகத் துறையினரின் பங்களிப்பு மிக முக்கியமானதாக இருந்தது. 26 ஆண்டுகளுக்கு முன்பு உத்தரகாண்ட் மாநிலம் உருவானபோது, அடல் பிஹாரி வாஜ்பாய் நாட்டின் பிரதமராக இருந்தார்” என்றார்.

மேலும், உத்தரகாண்ட் மாநிலத்தை இலக்கிய சுற்றுலாவின் முக்கிய மையமாக மாற்றுவதற்குத் தங்கள் அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதற்காக, எழுத்தாளர்கள் தங்குவதற்கான வசதிகள் மற்றும் படிப்பதற்கான இடங்களுடன் கூடிய இரண்டு ‘இலக்கிய கிராமங்கள்’ (சாகித்ய கிராம்) அமைக்கப்பட உள்ளதாகக் கூறினார்.

பிரதமர் நரேந்திர மோடியின் ஊக்கத்தால் இந்த முயற்சி முன்னெடுக்கப்படுவதாகக் குறிப்பிட்ட முதல்வர், இந்த இலக்கிய கிராமங்கள் எழுத்தாளர்களுக்குச் சிறந்த சூழலை உருவாக்குவதுடன், உத்தரகாண்ட் மாநிலத்தின் இலக்கியப் பாரம்பரியத்தை மேலும் வளப்படுத்துவதிலும் முக்கியப் பங்கு வகிக்கும் என்று தெரிவித்தார்.

Hindusthan Samachar / LOGESHWARI V