Enter your Email Address to subscribe to our newsletters

வாலாஜா, 29 அக்டோபர் (ஹி.ச.)
ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா அருகே உள்ள முத்தமிழ் நகரில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்தக் குடியிருப்பின் சில பகுதிகள் வாலாஜா நகராட்சி எல்லையிலும், மற்ற பகுதிகள் வி.சி. மோட்டூர் ஊராட்சி எல்லையிலும் அமைந்துள்ளன.
இதனால், அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவதில் நிர்வாக ரீதியாகத் தாமதம் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் முழுமையாகக் கிடைக்காததால் அன்றாட வாழ்க்கையில் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருவதாகவும் அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
முத்தமிழ் நகரில் முறையான சாலை வசதி இல்லாததால், மழைக்காலங்களில் மழைநீர் தேங்கி சாலைகள் சேறும் சகதியுமாக மாறிவிடுவதாகப் பொதுமக்கள் கூறுகின்றனர். இதனால், வீடுகளில் இருந்து வெளியே செல்வதற்கே சிரமம் ஏற்படுகிறது.
சாலைகள் சேதமடைந்துள்ளதால் பள்ளி மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் குடியிருப்புப் பகுதிக்குள் வருவதில் சிக்கல் ஏற்படுவதாகவும், அவசர மருத்துவ உதவிக்காக ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் வந்து செல்வதும் பாதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.
இப்பகுதியில் முறையான கழிவுநீர் கால்வாய் வசதி இல்லாததால், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் குடியிருப்புப் பாதைகளில் தேங்கி நிற்பதாகக் கூறப்படுகிறது.
இதனால் துர்நாற்றம் வீசுவதுடன், குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை கழிவுநீர் தேங்கிய பகுதிகளைக் கடந்தே செல்ல வேண்டிய நிலை இருப்பதாக மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
மேலும், தேங்கும் கழிவுநீரால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய்த்தொற்றுகள் பரவும் அபாயம் இருப்பதாகவும், குடிநீரில் கழிவுநீர் கலப்பதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதனால், குடியிருப்புவாசிகள் சுகாதாரம் குறித்த கவலையில் உள்ளனர்.
இந்தப் பிரச்சினைகள் குறித்து அரசு அதிகாரிகள், சட்டப்பேரவை உறுப்பினர், மாவட்ட ஆட்சியர் மற்றும் முதலமைச்சரின் தனிப்பிரிவு உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடம் மனுக்கள் அளித்தும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனப் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே, முத்தமிழ் நகர் பகுதியில் நிலவும் நிர்வாகப் பிரச்சினைக்குத் தீர்வு கண்டு, சாலை வசதி, கழிவுநீர் கால்வாய் மற்றும் பாதுகாப்பான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தர மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Hindusthan Samachar / LOGESHWARI V