Enter your Email Address to subscribe to our newsletters

பாட்னா , 03 அக்டோபர் (ஹி.ச.)
பீகார் மாநிலம் அராரியா மாவட்டம் ராணிகஞ்ச் பகுதியில் அசாம் மாநில பதிவு எண் கொண்ட மினி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது.
கர்காட் சுங்கச்சாவடி அருகே வந்தபோது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலை தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் லாரி பலத்த சேதமடைந்தது.
விபத்து நடந்ததும் லாரியில் இருந்த ஓட்டுநரும், கிளீனரும் வாகனத்தை அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடினர். இதனால் சந்தேகமடைந்த பொதுமக்கள் லாரியை சோதனையிட்டனர்.
அப்போது லாரியின் மேற்பகுதியில் சிமெண்டு மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததும், அவற்றுக்கு அடியில் நூற்றுக்கணக்கான வெளிநாட்டு மதுபாட்டில்கள் பெட்டிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததும் தெரியவந்தது.
பீகாரில் கடந்த 2016-ம் ஆண்டு முதல் முழு மதுவிலக்கு சட்டம் அமலில் இருந்து வரும் நிலையில், மதுபானங்கள் கடத்தி வரப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதற்கிடையே லாரியில் மதுபாட்டில்கள் இருப்பதை அறிந்த அப்பகுதி மக்கள், விபத்தில் சிக்கிய லாரியை மீட்க உதவாமல், மதுபாட்டில்களை போட்டி போட்டுக்கொண்டு அள்ளிச்செல்லத் தொடங்கினர்.
சிறுவர்கள், இளைஞர்கள், முதியவர்கள் மற்றும் பெண்கள் என பலரும் மதுபாட்டில்கள் மற்றும் பெட்டிகளை கைகளில் தூக்கிச்சென்றனர்.
இந்த காட்சிகளை சிலர் வீடியோவாக பதிவு செய்த நிலையில், அந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
இதுகுறித்து தகவல் அறிந்த ராணிகஞ்ச் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பொதுமக்களை அங்கிருந்து கலைத்தனர்.
பின்னர் விபத்துக்குள்ளான மினி லாரியையும், அதில் எஞ்சியிருந்த மதுபானங்களையும் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து சர்தார் எஸ்.டி.பி.ஓ. சுஷில் குமார் கூறுகையில்,
மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள வீடியோ காட்சிகளின் அடிப்படையில் மதுபாட்டில்களை எடுத்துச் சென்றவர்களை அடையாளம் காணும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது என்றார்.
மதுவிலக்கு அமலில் உள்ள பீகாரில், கடத்தி வரப்பட்ட மதுபாட்டில்களை பொதுமக்கள் அள்ளிச்சென்ற சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA