Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 03 அக்டோபர் (ஹி.ச.)
ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மகளிர் ஹாக்கி பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய அணிக்கு விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
1982ஆம் ஆண்டுக்குப் பிறகு 44 ஆண்டுகள் கழித்து இந்திய மகளிர் ஹாக்கி அணி மீண்டும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
அபாரமான ஆற்றல் மற்றும் அசாத்திய மன உறுதியுடன் இந்த வெற்றியைப் பதிவு செய்துள்ள இந்திய மகளிர் ஹாக்கி வீராங்கனைகள், சாதிக்க நினைக்கும் இந்திய இளைஞர்களுக்கு முன்மாதிரியாக விளங்குவதாக ஆதவ் அர்ஜுனா குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த தங்கப்பதக்க வெற்றியின் மூலம் 2028ஆம் ஆண்டு நடைபெற உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய மகளிர் ஹாக்கி அணி நேரடியாகத் தகுதி பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டியிலும் வெற்றி வாகை சூடி, இந்திய நாட்டின் புகழை உலக அரங்கில் மீண்டும் நிலைநாட்ட வேண்டும் என இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு ஆதவ் அர்ஜுனா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / GOKILA arumugam