Enter your Email Address to subscribe to our newsletters

அரவக்குறிச்சி, 03 அக்டோபர் (ஹி.ச.)
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே கோவிலூரில் பாரத ஸ்டேட் வங்கி கிளை செயல்பட்டு வருகிறது. கடந்த செப்டம்பர் 21-ம் தேதி அதிகாலை சுமார் 1 மணியளவில், முகமூடி அணிந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல் வங்கியின் ஜன்னல் கம்பிகளை உடைத்து உள்ளே நுழைந்ததாக கூறப்படுகிறது.
வங்கிக்குள் நுழைந்த மர்ம நபர்கள் அங்கிருந்த பணம் மற்றும் நகைகளை கொள்ளையடிக்க முயன்றுள்ளனர். அப்போது திடீரென வங்கியின் அலாரம் ஒலித்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த வங்கி ஊழியர்கள் மற்றும் அரவக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
வங்கியில் இருந்த பணம் மற்றும் நகைகள் கொள்ளையடிக்கப்படவில்லை என்பது விசாரணையில் தெரியவந்தது.
தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. மேலும், வங்கியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்தனர்.
அதில் 4 பேர் வங்கிக்குள் நுழைந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக அரவக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.
விசாரணையில், கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவர்கள் உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து தனிப்படை போலீசார் உத்தரப்பிரதேசத்துக்குச் சென்று தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
அங்கு பஹீம் முகமது கான் (35), சலீம் (32) ஆகிய இருவரை கைது செய்தனர். பின்னர் இருவரையும் கரூருக்கு அழைத்து வந்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
நீதிமன்ற உத்தரவின்படி இருவரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேலும், இந்த வங்கி கொள்ளை முயற்சியில் தொடர்புடையதாகக் கூறப்படும் மற்ற நபர்களை பிடிக்கவும், சம்பவத்தின் பின்னணி குறித்து அறியவும் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / LOGESHWARI V