ஜம்மு காஷ்மீரில் அடுத்தடுத்து 2 சாலை விபத்துகள்
ஜம்மு காஷ்மீர், 03 அக்டோபர் (ஹி.ச.) ராம்பன் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் அரை மணி நேர இடைவெளியில் இரண்டு தனித்தனி விபத்துகள் நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில், சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தபோது
Accident


ஜம்மு காஷ்மீர், 03 அக்டோபர் (ஹி.ச.)

ராம்பன் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் அரை மணி நேர இடைவெளியில் இரண்டு தனித்தனி விபத்துகள் நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதில், சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மலையில் மோதி நின்றதாக கூறப்படுகிறது.

இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், 47 பயணிகள் காயமடைந்தனர்.

விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் மீட்புப் பணிகளுக்காக அதிரடிப் படையினர் மற்றும் மத்திய ரிசர்வ் காவல் படை (CRPF) வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

இதனிடையே, மீட்புப் பணியில் ஈடுபடுவதற்காகச் சென்ற பாதுகாப்புப் படையினரின் வாகனமும் எதிர்பாராதவிதமாக விபத்தில் சிக்கி கவிழ்ந்தது. இந்த இரண்டாவது விபத்தில் 6 காவல்துறையினர் மற்றும் 3 சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் காயமடைந்தனர்.

இரண்டு விபத்துகளிலும் சேர்த்து மொத்தம் 56 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்த அனைவரும் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இரண்டு சாலை விபத்துகள் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்துக்கான காரணம் குறித்து தொடர்ந்து தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

இந்த சம்பவங்களுக்கு ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா வருத்தம் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள அவர், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / LOGESHWARI V