Enter your Email Address to subscribe to our newsletters

புதுக்கோட்டை, 03 அக்டோபர் (ஹி.ச.)
மச்சுவாடி பகுதியைச் சேர்ந்த கணேசன், நெல்லு மண்டி தெருவில் உள்ள கட்டிடத்தில் கடந்த 37 ஆண்டுகளாக சிவகாமி ஜுவல்லரி என்ற பெயரில் நகைக்கடை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், கடை அமைந்துள்ள கட்டிடத்தை முகமது அலி மற்றும் முகமது இஸ்மாயில் ஆகியோர் கடந்த ஓராண்டுக்கு முன்பு வாங்கியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, கடையை காலி செய்யுமாறு கணேசனிடம் புதிய உரிமையாளர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதற்கு கணேசன், கடையை காலி செய்வதற்கு இரண்டு ஆண்டுகள் அவகாசம் வேண்டும் என பேச்சுவார்த்தை நடத்தி வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக இருதரப்புக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், தமக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் கணேசன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, கடையை காலி செய்வது தொடர்பான விவகாரம் நீதிமன்றத்தில் வழக்காக நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று இரவு ஜேசிபி இயந்திரம் மூலம் கடையின் கட்டிடம் இடிக்கப்பட்டதாக கணேசன் குற்றம்சாட்டியுள்ளார். அப்போது கடைக்குள் தங்க நகைகள், வெள்ளிப் பொருட்கள் மற்றும் முக்கிய ஆவணங்கள் உள்ளிட்ட பொருட்கள் இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், கட்டிடம் இடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி கணேசன் புதுக்கோட்டை நகர காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டிடம் இடிக்கப்பட்டதற்கான காரணம், கடையில் இருந்த பொருட்களின் நிலை உள்ளிட்ட விவரங்கள் போலீசாரின் விசாரணைக்குப் பின்னரே முழுமையாக தெரியவரும்.
Hindusthan Samachar / LOGESHWARI V