Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 03 அக்டோபர் (ஹி.ச.)
விவசாயத்துடன் இணைந்து கூடுதல் வருமானம் பெற விரும்பும் விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கு தேனீ வளர்ப்பு ஒரு சிறந்த வாய்ப்பாக உள்ளது. இதனை ஊக்குவிக்கும் வகையில், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் சார்பில் தேனீ வளர்ப்பு தொடர்பான ஒரு நாள் பயிற்சி நடத்தப்பட உள்ளது.
தேனீ வளர்ப்பை முறையாக மேற்கொள்வதன் மூலம் தேன் உற்பத்தி செய்வதுடன், விவசாயப் பயிர்களில் மகரந்தச் சேர்க்கை அதிகரிப்பதன் வாயிலாகவும் பயன் பெற முடியும். இதனால் தேனீ வளர்ப்பை ஒரு துணைத் தொழிலாக மேற்கொள்ள ஆர்வம் உள்ளவர்களுக்கு இந்தப் பயிற்சி பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பயிற்சியில் தேனீ இனங்களை அடையாளம் காணுதல், தேனீக்களை பெட்டிகளில் வளர்க்கும் முறைகள் மற்றும் தேனீப் பெட்டிகளை முறையாகப் பராமரிப்பது தொடர்பான அடிப்படை தகவல்கள் இடம்பெறும். மேலும், தேனீக்களுக்கு தேவையான உணவு வளங்களை வழங்கும் பூக்கும் தாவரங்கள் குறித்தும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
தேனீ வளர்ப்பில் முக்கியமானதாகக் கருதப்படும் தேன் சேகரிப்பு மற்றும் தேனைப் பிரித்தெடுக்கும் முறைகள் குறித்தும் பயிற்சியாளர்களுக்கு விளக்கம் அளிக்கப்படும். இதனுடன், தேனீக்களைப் பாதிக்கும் இயற்கை எதிரிகள் மற்றும் நோய்களை அடையாளம் கண்டு, அவற்றை நிர்வகிக்கும் வழிமுறைகளும் எடுத்துரைக்கப்படுகின்றன.
தேனீ வளர்ப்பில் புதிதாக ஈடுபட விரும்பும் விவசாயிகள், தொழில்முனைவோர், கிராமப்புற இளைஞர்கள் மற்றும் கூடுதல் வருமானம் பெற விரும்புபவர்கள் இந்தப் பயிற்சியின் மூலம் அடிப்படை தொழில்நுட்ப அறிவைப் பெற முடியும்.
தேனீ வளர்ப்பை சிறு தொழிலாகத் தொடங்க விரும்புவோர், தேனீப் பெட்டிகளைத் தேர்வு செய்வது முதல் பராமரிப்பு மற்றும் தேன் சேகரிப்பு வரையிலான நடைமுறைகளை அறிந்து கொள்வது முக்கியம். அந்த வகையில், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் இந்த ஒரு நாள் பயிற்சி தேனீ வளர்ப்பில் ஆர்வம் உள்ளவர்களுக்கு தொடக்கநிலை வழிகாட்டியாக அமையும்.
Hindusthan Samachar / LOGESHWARI V