Enter your Email Address to subscribe to our newsletters

அமராவதி, 30 அக்டோபர் (ஹி.ச.)
ஆந்திர மாநில ஓய்வுபெற்ற டி.ஜி.பி.யும், ஆந்திர அரசு போக்குவரத்துக் கழகத்தின் முன்னாள் நிர்வாக இயக்குனருமான என். பாலசுப்பிரமணியம் உடல்நலக்குறைவு காரணமாக அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணம் அடைந்தார்.
அவரது மறைவுக்கு ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, மந்திரி நாரா லோகேஷ் ஆகியோர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து சந்திரபாபு நாயுடு வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், பாலசுப்பிரமணியம் நேர்மைக்கும், கடமை உணர்வுக்கும் எடுத்துக்காட்டாக விளங்கியவர் என்றும், எந்தச் சூழ்நிலையிலும் நேர்மையில் சமரசம் செய்துகொள்ளாதவர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
காவல்துறை, உளவுத்துறை, போக்குவரத்து மற்றும் அரசு நிர்வாகம் என பல்வேறு துறைகளில் சிறப்பாகப் பணியாற்றிய அவர், நிர்வாக சீர்திருத்தங்கள், புதிய முயற்சிகள் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்தவர் என்றும் புகழாரம் சூட்டியுள்ளார்.
மேலும், சில மாதங்களுக்கு முன்புவரை தனது அனுபவத்தின் மூலம் ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பான சேவைகளை வழங்கியதாகவும், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தபோதும் துணிச்சலுடன் போராடியதாகவும் தெரிவித்துள்ளார். அவரது மறைவு மாநிலத்துக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு என்றும், அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதாகவும் சந்திரபாபு நாயுடு குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல், மந்திரி நாரா லோகேஷ் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், பாலசுப்பிரமணியத்தின் மறைவு மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
நேர்மை, அர்ப்பணிப்பு மற்றும் துணிச்சலுடன் பணியாற்றிய அவரது சேவைகள் என்றும் நினைவுகூரப்படும் என்றும், நவீன காவல்துறை நிர்வாகத்தின் வழிகாட்டியாக அவர் திகழ்ந்தார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் சேவையில் அவர் காட்டிய அர்ப்பணிப்பும், துணிச்சலும் என்றும் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்கும் என்று புகழாரம் சூட்டியுள்ள நாரா லோகேஷ், அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA