தீ விபத்தில்லா தீபாவளி கொண்டாட பொதுமக்களுக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
சென்னை, 30 அக்டோபர் (ஹி.ச.) தீபாவளி பண்டிகையின்போது ஏற்படும் தீ விபத்துகள் மற்றும் பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் காயங்களைத் தவிர்க்க பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத் துறை இயக்குநர் சோம
தீபாவளி


சென்னை, 30 அக்டோபர் (ஹி.ச.)

தீபாவளி பண்டிகையின்போது ஏற்படும் தீ விபத்துகள் மற்றும் பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் காயங்களைத் தவிர்க்க பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத் துறை இயக்குநர் சோமசுந்தரம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.

அனைத்து மாவட்ட மருத்துவ அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ள இந்தச் சுற்றறிக்கையில்,

தீபாவளியின்போது தீ விபத்துகளைத் தடுக்கும் வகையில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவ வசதிகளைத் தயார் நிலையில் வைத்திருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குழந்தைகளின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும், சுவாசப் பிரச்சினை உள்ளவர்கள் பட்டாசு புகையால் பாதிக்கப்படுவதைத் தவிர்க்க வெளியே வராமல் வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், திறந்தவெளியில் பட்டாசுகளை வெடிப்பதற்கு முன்பு அருகில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். தீ விபத்து ஏற்பட்டால் உடனடியாகச் செயல்பட தண்ணீர் வாளிகள் மற்றும் தீயணைப்புக் கருவிகளைத் தயாராக வைத்திருக்க வேண்டும்.

பயன்படுத்திய பட்டாசுகளைத் தண்ணீர் நிரப்பிய வாளியில் போட்டு அப்புறப்படுத்த வேண்டும். பட்டாசு வெடித்த பிறகு சோப்பு மற்றும் தண்ணீரால் கைகளைக் கழுவ வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேபோல், கையில் பட்டாசுகளை வைத்துக் கொளுத்தக் கூடாது; மின்கம்பங்கள் மற்றும் மின்கம்பிகளுக்கு அருகில் பட்டாசுகளை வெடிக்கக் கூடாது; பாதியில் எரிந்து அணைந்த பட்டாசுகளை மீண்டும் தொடவோ, தூக்கி வீசவோ கூடாது. பட்டாசுகளைக் கொளுத்த லைட்டர்களைப் பயன்படுத்துவதையும், மற்றவர்கள் மீது பட்டாசுகளை வீசுவதையும் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவுறுத்தல்களை அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலம் பொதுமக்களிடம் கொண்டு சேர்த்து, விபத்தில்லாத பாதுகாப்பான தீபாவளியைக் கொண்டாட விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு இயக்குநர் சோமசுந்தரம் உத்தரவிட்டுள்ளார்.

Hindusthan Samachar / GOKILA arumugam