Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 30 அக்டோபர் (ஹி.ச.)
தனியார் பள்ளிகளுக்கு அரசு அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி பணம் வசூலித்ததாக எழுந்துள்ள முறைகேடு புகார் தொடர்பான வழக்கில், முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு மூன்று நாட்கள் போலீஸ் காவல் வழங்கி சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கில் அன்பில் மகேஷிடம் விசாரணை நடத்துவதற்காக காவல்துறை தரப்பில் நீதிமன்றத்தில் அனுமதி கோரப்பட்டிருந்தது.
இதனை விசாரித்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி எல்.எஸ். சத்தியமூர்த்தி, அவரை மூன்று நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கினார்.
இதன்படி, காவல்துறை காவலில் இருக்கும் காலத்தில் அன்பில் மகேஷை அவரது வழக்கறிஞர் தினமும் சந்தித்துப் பேசுவதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
மேலும், விசாரணையின்போது அவருக்குத் தேவையான உணவு மற்றும் மருத்துவ வசதிகளை காவல்துறையினர் முறையாக ஏற்பாடு செய்து தர வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
அதேபோல், காவல்துறை விசாரணையின் போது அன்பில் மகேஷை உடல் ரீதியாகவோ அல்லது மன ரீதியாகவோ துன்புறுத்தக் கூடாது என்றும் நீதிமன்றம் தெளிவான அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.
மூன்று நாட்கள் காவல் விசாரணை நிறைவடைந்த பின்னர், நவம்பர் 2ஆம் தேதி மதியம் 12 மணிக்கு அன்பில் மகேஷை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
தனியார் பள்ளிகளுக்கான அரசு அங்கீகாரம் தொடர்பானதாகக் கூறப்படும் இந்த முறைகேடு வழக்கில், முன்னாள் அமைச்சரிடம் காவல்துறையினர் மேற்கொள்ளவுள்ள விசாரணை அரசியல் வட்டாரத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.
Hindusthan Samachar / LOGESHWARI V