Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 30 அக்டோபர் (ஹி.ச.)
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 119-வது ஜெயந்தி விழா மற்றும் 64-வது குருபூஜையை முன்னிட்டு, சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து, அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த முத்துராமலிங்கத் தேவரின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் தேமுதிக நிர்வாகிகள் மற்றும் கட்சியினர் உடனிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த பிரேமலதா விஜயகாந்த், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் வாழ்க்கை மற்றும் அவரது சிறப்புகள் குறித்து பேசினார்.
அப்போது, முத்துராமலிங்கத் தேவர் சாதாரண மனிதர் அல்ல என்றும், வீரமும் ஆளுமையும் நிறைந்த அவர் தனது வாழ்நாள் முழுவதையும் மக்களுக்காக அர்ப்பணித்தவர் என்றும் குறிப்பிட்டார்.
மேலும், ஆன்மீகத்தின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்த தேவர், முருகப் பெருமானின் தீவிர பக்தராகவும் விளங்கியதாகத் தெரிவித்தார்.
அரசியல் மற்றும் மக்கள் பணியுடன் ஆன்மீகப் பணிகளிலும் சிறந்து விளங்கிய அவரது வாழ்க்கை அனைவருக்கும் நினைவுகூரத்தக்கது என்றும் பிரேமலதா கூறினார்.
முத்துராமலிங்கத் தேவரின் பிறந்தநாளும் நினைவு நாளும் ஒரே நாளில் அமைந்திருப்பது தனிச்சிறப்பு வாய்ந்தது எனக் குறிப்பிட்ட அவர், அவரது ஜெயந்தி மற்றும் குருபூஜையை முன்னிட்டு தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் மரியாதை செலுத்துவதாகவும் தெரிவித்தார்.
சென்னை நந்தனத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியின் மூலம் தேமுதிக சார்பில் முத்துராமலிங்கத் தேவருக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
Hindusthan Samachar / LOGESHWARI V