இந்திய ஜனநாயகம் சிதைக்கப்படுகிறது- ராகுல் காந்தி குற்றச்சாட்டு!
புதுடெல்லி, 30 அக்டோபர் (ஹி.ச.) டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெறவுள்ள பேரணியில் அரசியல் கட்சியினர் மட்டுமின்றி, சமூக ஆர்வலர்கள், தன்னார்வத் தொண்டர்கள், சிவில் சமூக அமைப்பினர், பத்திரிகையாளர்கள் எனப் பலரும் பங்கேற்கலாம் என்று மக்களவை எதிர்க்கட்சி
Rahul Gandhi


புதுடெல்லி, 30 அக்டோபர் (ஹி.ச.)

டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெறவுள்ள பேரணியில் அரசியல் கட்சியினர் மட்டுமின்றி, சமூக ஆர்வலர்கள், தன்னார்வத் தொண்டர்கள், சிவில் சமூக அமைப்பினர், பத்திரிகையாளர்கள் எனப் பலரும் பங்கேற்கலாம் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

மேலும், பேரணியில் பங்கேற்க டெல்லிக்கு வருபவர்களைத் தடுக்க மத்திய உள்துறை அமைச்சர் முயற்சி செய்வதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, ராம்லீலா மைதானத்தில் நடைபெறவுள்ள பேரணியில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, அரசியலுடன் நேரடித் தொடர்பில்லாதவர்கள், சமூக ஆர்வலர்கள், சேவை அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகள் மற்றும் பத்திரிகையாளர்கள் என ஜனநாயகத்தின் மீது அக்கறை கொண்ட அனைவரும் இந்தப் பேரணியில் கலந்துகொள்ளலாம் என்று அவர் தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உள்ளிட்டோர் இந்திய ஜனநாயகத்தைச் சிதைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.

இந்த விவகாரத்தை மையமாகக் கொண்டே பேரணி மற்றும் அதனுடன் தொடர்புடைய நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளதாகவும் அவர் கூறினார்.

பேரணியில் பங்கேற்பதற்காகப் பல்வேறு மாநிலங்களில் இருந்து டெல்லிக்கு வர விரும்பும் மக்களைத் தடுக்கும் முயற்சிகள் நடைபெறுவதாகவும் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.

குறிப்பாக, உத்தரப் பிரதேசம், பீகார், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா, தெலங்கானா மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் இருந்து வர விரும்பும் காங்கிரஸ் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் டெல்லிக்கு வருவதைத் தடுக்க மத்திய உள்துறை அமைச்சர் முயற்சி செய்வதாக அவர் தெரிவித்தார்.

பேரணியில் மக்கள் பங்கேற்பதைத் தடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், தங்களது நிகழ்ச்சிகளை முன்னெடுத்துச் செல்லத் தொடர்ந்து முயற்சி செய்து வருவதாகவும் அவர் கூறினார்.

தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் மற்றும் நாட்டின் ஜனநாயக அமைப்புகள் தொடர்பாக ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் நிலவி வரும் சூழலில், ராகுல் காந்தியின் இந்தக் குற்றச்சாட்டுகள் அரசியல் வட்டாரத்தில் கவனத்தைப் பெற்றுள்ளன.

Hindusthan Samachar / LOGESHWARI V