Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 30 அக்டோபர் (ஹி.ச.)
தமிழ்நாடு முழுவதும் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் பொதுமக்கள் தங்களது அடிப்படை வசதிகள் தொடர்பான புகார்களை எளிதாகத் தெரிவிக்கும் வகையில், வாட்ஸ்அப் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் சார்ந்த புதிய குறைதீர்ப்பு அமைப்பை உருவாக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்காக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் ஒப்பந்தப்புள்ளி (டெண்டர்) கோரப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,
இந்தத் திட்டத்தின் கீழ், வாட்ஸ்அப் அடிப்படையிலான செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் பொதுமக்கள் குறைதீர்ப்பு அமைப்பை வடிவமைத்தல், மேம்படுத்துதல், செயல்படுத்துதல் மற்றும் பராமரித்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இதற்கான தொழில்நுட்பப் பணிகளை மேற்கொள்ளும் அமைப்பு ஒருங்கிணைப்பாளரை
(System Integrator) தேர்வு செய்வதே தற்போதைய ஒப்பந்தப்புள்ளியின் முக்கிய நோக்கமாகும்.
இந்த வசதி நடைமுறைக்கு வரும்போது, நகர்ப்புறப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் குப்பைகள் அகற்றப்படாதது, குடிநீர் விநியோகப் பிரச்சினைகள், தெருவிளக்குகள் எரியாதது உள்ளிட்ட அன்றாட அடிப்படைப் பிரச்சினைகள் தொடர்பாக வாட்ஸ்அப் மூலம் புகார் அளிக்கும் வாய்ப்பு உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியுடன் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் புகார்களைப் புரிந்துகொண்டு, அவற்றை உரிய உள்ளாட்சி அமைப்புகளுக்கு அனுப்பி நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் இந்த அமைப்பு உருவாக்கப்பட உள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளையும் உள்ளடக்கிய வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது இதற்கான ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ள நிலையில், தொழில்நுட்ப அமைப்பு தேர்வு செய்யப்பட்டு திட்டம் செயல்பாட்டுக்கு வந்த பிறகே பொதுமக்கள் இந்த வசதியைப் பயன்படுத்த முடியும்.
இதன் மூலம் உள்ளாட்சி அமைப்புகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான புகார் தெரிவிக்கும் நடைமுறை மேலும் எளிமையாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / LOGESHWARI V