Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 31 அக்டோபர் (ஹி.ச.)
தமிழகத்தில் பெண்கள் தவறாக வாக்களித்துவிட்டோம் என ஒவ்வொரு நாளும் நினைத்துக் கொண்டிருப்பதாகவும், போராட வேண்டும் என்ற எண்ணத்திற்கு பெண்கள் வந்துவிட்டதாகவும் திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாக கூறி, தவெக அரசைக் கண்டித்து திமுக மகளிர் அணி ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. கனிமொழி எம்.பி தலைமையில் சென்னையில் ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தின்போது கனிமொழி பேசியதாவது;
தேர்தல் பரப்புரையின்போது, இது நாடா, காடா? என விஜய் கேள்வி எழுப்பியதைச் சுட்டிக்காட்டினார். கடந்த திமுக ஆட்சியின் செயல்பாடுகளை மாற்ற வேண்டும் என மக்கள் நினைத்தார்களா என்பது தெரியவில்லை. ஆனால், தற்போது தமிழகத்தில் என்ன நடக்கிறது எனக் கேள்வி எழுப்பினார்.
மேலும், திரைப்படத்தில் வில்லனைப் பாலத்தில் கட்டித் தொங்கவிடும் காட்சியைப் பார்த்துவிட்டு, அதுபோன்ற நடவடிக்கைகளை எடுப்பார்கள் என மக்கள் எதிர்பார்த்ததாகவும், ஆனால் தற்போது தவெகவைச் சேர்ந்த 20 பேரைக் கட்டித் தொங்கவிட வேண்டிய நிலை இருப்பதாகவும் விமர்சித்தார்.
தவெகவில் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் இணையும் நிலை இருப்பதாகக் குற்றம்சாட்டிய கனிமொழி, சேலம், அரக்கோணம், ராணிப்பேட்டை, ஆர்.கே. நகர், திருச்செந்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் தவெக நிர்வாகிகள் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டினார்.
போதைப்பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம் என விஜய் கூறிய நிலையில், அக்கட்சியைச் சேர்ந்த நிர்வாகி ஒருவர் 135 கிலோ மெத்தாம்பெட்டமைன் போதைப்பொருளைப் பதுக்கி வைத்திருந்ததாகவும் தெரிவித்தார்.
மேலும், தவெக ஆட்சியில் 700 கொலைகளும், பெண்களுக்கு எதிரான 400 குற்றங்களும் நடைபெற்றுள்ளதாகக் குற்றம்சாட்டிய அவர், காவல்துறையைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதலமைச்சர் ஜோசப் விஜய் என்ன நடவடிக்கை எடுத்து வருகிறார் என்றும் கேள்வி எழுப்பினார்.
திமுக நிர்வாகிகள் பொதுக்கூட்டங்களில் பேசினாலே கைது செய்யப்படுவதாகவும், திமுகவைக் கண்காணிப்பதிலேயே காவல்துறையினர் கவனம் செலுத்துவதாகவும் கனிமொழி விமர்சித்தார்.
Hindusthan Samachar / GOKILA arumugam