Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 31 அக்டோபர் (ஹி.ச)
கோவை – பொள்ளாச்சி பிரதான சாலையில் நிலவும் கடுமையான போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், குறிச்சிக்குளம் முதல் சிட்கோ வரை 4.75 கிலோமீட்டர் தொலைவுக்கு உயர்மட்ட மேம்பாலம் அமைக்க தமிழக நெடுஞ்சாலைத்துறை திட்டமிட்டுள்ளது.
இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ரூ.46 லட்சம் மதிப்பில் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. அக்டோபர் 30-ம் தேதி ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில், நவம்பர் 10-ம் தேதி ஒப்பந்தப்புள்ளிகள் திறக்கப்பட உள்ளன.
இந்தத் திட்டத்தின் கீழ், மேம்பாலம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள், போக்குவரத்து நெரிசல், கட்டுமான வடிவமைப்பு, தேவையான நிலம் மற்றும் திட்டத்திற்கான மொத்த செலவு உள்ளிட்டவை ஆய்வு செய்யப்பட உள்ளன.
கோவை – பொள்ளாச்சி சாலையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகனப் போக்குவரத்தால் ஏற்படும் நெரிசலைக் குறைத்து, பயண நேரத்தை மிச்சப்படுத்தும் நோக்கில் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, அரசின் ஒப்புதல் மற்றும் நிதி ஒதுக்கீடு கிடைத்த பின்னர் மேம்பாலம் அமைப்பதற்கான அடுத்தகட்டப் பணிகள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / GOKILA arumugam