Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 31 அக்டோபர் (ஹி.ச.)
கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள பிரபல லீ மெரிடியன் ஹோட்டலில்,
2026-ம் ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையை வரவேற்கும் வகையில், ஆண்டுதோறும் நடைபெறும் பாரம்பரிய கேக் மிக்சிங் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை உற்சாகமாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் ஹோட்டல் விருந்தினர்கள் மற்றும் ரோட்டரி கிளப்பைச் சேர்ந்த சிறப்பு அழைப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, கேக் தயாரிப்பதற்கான கலவையில் நட்ஸ் மற்றும் உலர் பழங்களைச் சேர்த்து மகிழ்ச்சியுடன் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
இதுகுறித்து ஹோட்டலின் நிர்வாகச் சமையல் கலைஞர் டொம்னிக் சேவியர்
(Domnic Xavier) கூறுகையில்,
2026-ம் ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான கேக் கலவை தயாரிப்பில் 200 முதல் 250 கிலோ வரை நட்ஸ் மற்றும் உலர் பழங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இதில் பாதாம், பிஸ்தா, முந்திரி, உலர் திராட்சை, கருப்புத் திராட்சை, பேரீச்சம்பழம், ஆப்ரிகாட், செர்ரி, பிளாக்பெர்ரி, அத்திப்பழம் மற்றும் அக்ரூட் பருப்புகள் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் இறக்குமதி செய்யப்பட்ட மதுபானத்தில் கலந்து ஊறவைக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
தயாரிக்கப்பட்ட இந்தக் கலவை சுமார் 40 முதல் 45 நாட்கள் வரை ஊறவைக்கப்பட்ட பின்னர், அதனைப் பயன்படுத்தி சுவையான பிளம் கேக்குகள் மற்றும் புட்டிங்குகள் தயாரிக்கப்பட உள்ளன. இந்த கேக்குகள் ஹோட்டலில் தங்கும் விருந்தினர்களுக்கு வழங்கப்படுவதுடன், வெளி வாடிக்கையாளர்களின் விற்பனைக்காகவும் வைக்கப்படும் எனக் குறிப்பிட்டார்.
கடந்த ஆண்டு இங்கு 500 கிலோவுக்கும் அதிகமான கேக்குகள் தயாரிக்கப்பட்டதாகவும், இந்த ஆண்டும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
கிறிஸ்துமஸ் பண்டிகையின் வருகையை முன்னிட்டு நடைபெற்ற இந்த கேக் மிக்சிங் நிகழ்ச்சி, பங்கேற்றவர்களிடையே உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA