Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 31 அக்டோபர் (ஹி.ச.)
வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தற்போது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றுள்ளது.
இது அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மேலும் வலுப்பெற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,
தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் நேற்று குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது.
தொடர்ந்து மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்த இந்த வானிலை அமைப்பு, தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல், அந்தமான் நிக்கோபார் தீவுகள் பகுதிகளில் நிலைகொண்டுள்ளது.
இந்நிலையில், இன்று காலை 5.30 மணி நிலவரப்படி இந்தக் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், அடுத்த 12 மணி நேரத்தில் இதே பகுதியில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறுவதற்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதனால் வங்கக்கடல் பகுதியில் அடுத்தடுத்த நாட்களில் வானிலை மாற்றங்கள் ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்ந்து மேற்கு - வடமேற்கு திசையில் நகரும் இந்த வானிலை அமைப்பு, மேலும் வலுப்பெற்று நவம்பர் 2-ஆம் தேதி மாலை ஆந்திரப் பிரதேச கடற்கரையை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிக்கு நகரும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
இதனால் வங்கக்கடல் மற்றும் ஆந்திர கடலோரப் பகுதிகளில் வானிலை நிலவரம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் பட்சத்தில் அதன் நகர்வு மற்றும் தீவிரத்தைப் பொறுத்து அடுத்தகட்ட வானிலை முன்னறிவிப்புகள் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளது.
Hindusthan Samachar / LOGESHWARI V