ஊழல் குற்றச்சாட்டு கூற முடியாததால் எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றன - அமைச்சர் விஜய் பாலாஜி!
ஈரோடு, 31 அக்டோபர் (ஹி.ச.) போலியோ ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, ரோட்டரி கிளப் ஆப் ஈரோடு சென்ட்ரல் சார்பில் மாவட்ட அளவிலான பள்ளி மாணவ, மாணவிகளுக்கான வாலிபால் போட்டி ஈரோடு வ.உ.சி. விளையாட்டு மைதானத்தில் இன்று நடைபெற்றது. இந்தப் போட்டியை ஈரோடு நாடாளு
Vijay Balaji


ஈரோடு, 31 அக்டோபர் (ஹி.ச.)

போலியோ ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, ரோட்டரி கிளப் ஆப் ஈரோடு சென்ட்ரல் சார்பில் மாவட்ட அளவிலான பள்ளி மாணவ, மாணவிகளுக்கான வாலிபால் போட்டி ஈரோடு வ.உ.சி. விளையாட்டு மைதானத்தில் இன்று நடைபெற்றது.

இந்தப் போட்டியை ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ. பிரகாஷ், மாவட்ட ஆட்சியர் சி. கந்தசாமி மற்றும் அமைச்சர் மா. விஜய் பாலாஜி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர்,

வரும் நவம்பர் 3-ஆம் தேதி தமிழக முதலமைச்சர் ஈரோடு மாவட்டத்திற்கு வருகை தர உள்ளதாகத் தெரிவித்தார். அப்போது சுமார் 10 முதல் 12 மாவட்டங்களைச் சேர்ந்த மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளதாகவும் கூறினார்.

சுமார் ரூ.1,100 கோடி மதிப்பீட்டில் ஏறத்தாழ 4,000 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இதற்கான முன்னேற்பாட்டுப் பணிகள் தலைமைச் செயலாளர் மற்றும் வருவாய்த்துறை அமைச்சருடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து தமிழக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நடத்தி வரும் போராட்டங்கள் குறித்துப் பேசிய அவர், அரசின் மீது ஊழல் மற்றும் லஞ்சக் குற்றச்சாட்டுகளை முன்வைக்க முடியாததால், தங்களது அரசியல் இருப்பை வெளிப்படுத்தும் நோக்கில் போராட்டங்களை நடத்துவதாக விமர்சித்தார்.

குடியரசுத் துணைத் தலைவர் வருகையின்போது ஏற்பட்ட மின்தடை குறித்த கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர், அது திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்டதல்ல என்றும், தவிர்க்க முடியாத தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே மின்தடை ஏற்பட்டதாகவும் விளக்கமளித்தார்.

மேலும், கடந்த ஆட்சியில் மாநிலத்தின் நிதிநிலை எந்த அளவுக்குப் பாதிக்கப்பட்டிருந்தது என்பது அனைவருக்கும் தெரியும் என்றும், மக்களின் அத்தியாவசியத் தேவைகள் மற்றும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்காகவே அரசு நிதி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் கூறினார்.

வரும் காலங்களில் மாநிலத்தின் நிதிநிலையைச் சீரமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

முன்னாள் அமைச்சர்கள் மீதான கைது நடவடிக்கைகள் குறித்துப் பேசிய அவர், போதிய ஆதாரங்கள் மற்றும் தகவல்கள் இருப்பதாலேயே சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகக் குறிப்பிட்டார்.

தவறு செய்யாதவர்கள் ஏன் நீதிமன்றத்தை நாடி முன்ஜாமீன் பெற வேண்டும் என்றும் கேள்வி எழுப்பினார்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்திற்கு ரூ.100 கோடி விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த காலங்களைக் காட்டிலும் தற்போது விற்பனை சிறப்பாக நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

நீர்நிலைப் புறம்போக்கு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாகப் பேசிய அவர், நீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையிலும், பருவமழைக் காலத்தில் உறுதியற்ற கட்டடங்களால் விபத்துகள் ஏற்படுவதைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் அதிகாரிகள் செயல்பட்டு வருவதாகக் கூறினார்.

பொதுமக்களின் அத்தியாவசியத் தேவைகள் மற்றும் பட்டா தொடர்பான கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு உரிய தீர்வு காணப்படும் என்றும் உறுதியளித்தார்.

இடைத்தேர்தல் வெற்றி குறித்துப் பேசிய அமைச்சர், மக்களுக்குப் பணம் வழங்காமல் அவர்களின் ஆதரவுடன் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளதாகக் கூறினார்.

அந்தத் தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாதவர்களே பெண்கள் மற்றும் அரசு குறித்து விமர்சனங்களை முன்வைத்து வருவதாகவும் தெரிவித்தார்.

Hindusthan Samachar / LOGESHWARI V