Enter your Email Address to subscribe to our newsletters

நீலகிரி, 31 அக்டோபர் (ஹி.ச.)
நீலகிரி மாவட்டம்
முதுமலை புலிகள் காப்பகத்தில் காட்டு யானைகள், புலிகள், சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
வனப்பகுதியில் விலைமதிப்புள்ள மரங்களும் இருப்பதால், வனவிலங்குகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், வனப்பகுதியில் நடைபெறும் சட்டவிரோதச் செயல்களைத் தடுக்கவும் வனத்துறையினர் தொடர்ந்து கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே, முதுமலை மற்றும் மசினகுடி வனப்பகுதிகளில் காட்டு யானைகள் தொடர்ந்து உயிரிழந்து வருவது வனத்துறையினர் மற்றும் வனவிலங்கு ஆர்வலர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சூழலில், முதுமலை தெப்பக்காடு வனச்சரகத்திற்கு உட்பட்ட வட்டச்சாலை பகுதியில் வனப் பணியாளர்கள் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, மணல் சாலை கண்காணிப்புக் கோபுரத்திற்கு அருகில் சிறுத்தை ஒன்று அசைவின்றிக் கிடப்பதைக் கண்டனர். அருகில் சென்று ஆய்வு செய்தபோது, அது சுமார் 9 வயது மதிக்கத்தக்க ஆண் சிறுத்தை என்பதும், ஏற்கெனவே உயிரிழந்திருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, வனத்துறை உயர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. துணை இயக்குநர் கணேசன் உத்தரவின்பேரில், வனச்சரகர் சிவக்குமார் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
சிறுத்தையின் உயிரிழப்புக்கான காரணம் உடனடியாகக் கண்டறிய முடியாத நிலையில், கால்நடை மருத்துவக் குழுவினர் வரவழைக்கப்பட்டனர். தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, உயிரிழந்த சிறுத்தையின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
மேலும், விரிவான ஆய்வுக்காக அதன் முக்கிய உடற்பாகங்கள் சேகரிக்கப்பட்டு ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன.
சிறுத்தையின் உடலில் காயங்கள் காணப்படுவதால், மற்றொரு வனவிலங்குடன் ஏற்பட்ட மோதலின்போது அது உயிரிழந்திருக்கலாம் என வனத்துறையினர் முதற்கட்டமாகக் கருதுகின்றனர்.
எனினும், ஆய்வகப் பரிசோதனை முடிவுகள் கிடைத்த பின்னரே உயிரிழப்புக்கான காரணத்தை உறுதிப்படுத்த முடியும் என்றும் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக வனத்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / LOGESHWARI V