Enter your Email Address to subscribe to our newsletters

குஜராத், 31 அக்டோபர் (ஹி.ச.)
குஜராத் மாநிலம் ஏக்தா நகரில் உள்ள சர்தார் வல்லபாய் படேலின் ஒற்றுமை சிலைக்கு (Statue of Unity), அவரது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதனைத் தொடர்ந்து, அப்பகுதியில் உள்கட்டமைப்பு மற்றும் சுற்றுலா வசதிகளை மேம்படுத்தும் வகையில் ரூ.400 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியின்போது சில திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர்,
ஏற்கெனவே நிறைவடைந்த திட்டங்களைப் பொதுமக்கள் பயன்பாட்டிற்காகத் திறந்து வைத்தார். மேலும், சில புதிய திட்டங்களையும் நாட்டின் வளர்ச்சிப் பணிகளின் ஒரு பகுதியாக அர்ப்பணித்தார்.
ஏக்தா நகரில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் திட்டங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.
நகரின் அழகை மேம்படுத்தும் வகையில் முக்கியக் கட்டடங்களில் முகப்பு விளக்கு அலங்காரங்கள் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும் நர்மதா படித்துறையை மேம்படுத்தும் பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளன.
சுற்றுலாப் பயணிகளின் தங்குமிட வசதியை அதிகரிக்கும் வகையில் இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழகத்தின் (IRCTC) சார்பில் ஹோட்டல் அமைக்கும் திட்டமும் இதில் இடம்பெற்றுள்ளது.
இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில் ஏக்தா நகரில் மழைக்காடு சுற்றுலா மையம் (Rainforest), யூனிட்டி டிரெயில் மற்றும் சுற்றுச்சூழல் நடைபாதை (Eco Trail) ஆகியவற்றை மேம்படுத்தும் திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதுதவிர, கோரா - பந்த்ரா சாலை மேம்பாட்டுப் பணிக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார். நகரில் திடக்கழிவுகளைச் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் கையாளும் நோக்கில் ஒருங்கிணைந்த பூஜ்ஜியக் கழிவு மேலாண்மைத் திட்டமும் செயல்படுத்தப்பட உள்ளது.
கல்வானி பகுதியில் சுற்றுச்சூழல் சுற்றுலாவை மேம்படுத்துதல், கற்றாழைத் தோட்டம் மற்றும் வண்ணத்துப்பூச்சிப் பூங்காவை ஒருங்கிணைந்த முறையில் மேம்படுத்துதல் உள்ளிட்ட திட்டங்களும் இந்த நிகழ்ச்சியில் இடம்பெற்றன.
சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளையொட்டி நடைபெற்ற இந்த நிகழ்ச்சியின் மூலம் ஏக்தா நகரின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதுடன், சுற்றுலாப் பயணிகளைக் கவரும் புதிய கட்டமைப்புகளை உருவாக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் அப்பகுதியின் சுற்றுலா வளர்ச்சிக்கும் உள்ளூர் பொருளாதாரத்திற்கும் ஊக்கம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / LOGESHWARI V