ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்- வேல்முருகன்
சென்னை, 04 அக்டோபர் (ஹி.ச.) சென்னை வியாசர்பாடி சர்மா நகர் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் முகமது இப்ராகிம், தனது ஆட்டோவின் தகுதிச் சான்றிதழை புதுப்பிப்பதற்காக பெற்ற கடனை திருப்பிச் செலுத்த முடியாத பொருளாதார நெருக்கடியில் சிக்கி உயிரிழந்ததாக கூறப்
வேல்முருகன்


சென்னை, 04 அக்டோபர் (ஹி.ச.)

சென்னை வியாசர்பாடி சர்மா நகர் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் முகமது இப்ராகிம், தனது ஆட்டோவின் தகுதிச் சான்றிதழை புதுப்பிப்பதற்காக பெற்ற கடனை திருப்பிச் செலுத்த முடியாத பொருளாதார நெருக்கடியில் சிக்கி உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியளிப்பதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி. வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியதாவது,

தொழிலை தொடர்ந்து நடத்துவதற்காகவே ஆட்டோ ஓட்டுநர்கள் கடன் பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், ஆனால் அந்தக் கடனை திருப்பிச் செலுத்தும் அளவுக்கு வருவாய் கிடைப்பதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

வாகனத் தகுதிச் சான்று, காப்பீடு, வாகனப் பராமரிப்பு, எரிபொருள் உள்ளிட்ட செலவுகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், செயலி வழி போக்குவரத்து நிறுவனங்களின் போட்டி மற்றும் கட்டண முறையால் ஆட்டோ ஓட்டுநர்களின் வருவாய் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வேல்முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.

முகமது இப்ராகிமின் உயிரிழப்பு தனிப்பட்ட குடும்பத்தின் பிரச்சினை மட்டுமல்ல என்றும், தமிழகம் முழுவதும் உள்ள ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதார நெருக்கடியை வெளிப்படுத்தும் சம்பவம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

செயலி வழி போக்குவரத்து நிறுவனங்களை முறைப்படுத்தி, ஆட்டோ ஓட்டுநர்களின் பொருளாதாரச் சுமையை குறைக்கும் நிரந்தரக் கொள்கையை தமிழக அரசு வகுக்க வேண்டும் எனவும், முகமது இப்ராகிம் குடும்பத்திற்கு உடனடி உதவியும் எதிர்கால வாழ்வாதாரத்திற்கான பாதுகாப்பும் வழங்க வேண்டும் எனவும் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், ஆட்டோ ஓட்டுநர்களுக்காக தமிழக அரசின் சார்பில் பிரத்யேக செயலியை திறம்பட செயல்படுத்த வேண்டும் என்றும், ஆட்டோ ஓட்டுநர் சங்கங்களின் பிரதிநிதிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி நீண்டகாலப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் வலியுறுத்துவதாக வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / GOKILA arumugam