இடைத்தேர்தலில் ஆளுங்கட்சிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்- சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்
திண்டுக்கல், 04 அக்டோபர் (ஹி.ச.) தமிழகத்தில் நடைபெறும் இடைத்தேர்தல்களில் ஆளுங்கட்சிக்கு வெற்றி கிடைப்பது வழக்கமாக இருந்து வருவதாக சட்டப்பேரவை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் தெரிவித்துள்ளார். திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தாராபுரம்
பிரபாகர்


திண்டுக்கல், 04 அக்டோபர் (ஹி.ச.)

தமிழகத்தில் நடைபெறும் இடைத்தேர்தல்களில் ஆளுங்கட்சிக்கு வெற்றி கிடைப்பது வழக்கமாக இருந்து வருவதாக சட்டப்பேரவை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

தாராபுரம் மற்றும் மதுராந்தகம் இடைத்தேர்தல் குறித்த கேள்விக்கு, இடைத்தேர்தலில் ஆளுங்கட்சிக்கு வாக்களித்தால் தங்களது தொகுதிக்கு அதிக நன்மைகள் கிடைக்கும் என மக்கள் கருதும் நிலை தமிழக அரசியலில் நீண்ட காலமாக இருந்து வருவதாகக் கூறினார்.

“இடைத்தேர்தலில் ஆளுங்கட்சி வெற்றி பெறுவதுதான் வழக்கம். தொகுதிக்கு பயன்படும் என்ற அடிப்படையில் மக்கள் சிந்திப்பதால் ஆளுங்கட்சிக்கு வெற்றி வாய்ப்புகள் கிடைத்திருக்கின்றன” என அவர் தெரிவித்தார்.

அதே நேரத்தில், தான் சட்டப்பேரவைத் தலைவர் என்ற முறையில் அரசியல் சார்ந்த கேள்விகளுக்கு பதிலளிப்பது பொருத்தமாக இருக்காது என்றும் ஜே.சி.டி. பிரபாகர் கூறினார்.

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதிகளில் வரும் அக்டோபர் 6-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. அக்டோபர் 9-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), சத்தியபாமா (தாராபுரம்) ஆகியோர் தங்களது எம்.எல்.ஏ. பதவிகளை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்ததைத் தொடர்ந்து இரு தொகுதிகளும் காலியானதாக அறிவிக்கப்பட்டன.

தற்போது இரு தொகுதிகளிலும் திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழர் கட்சி மற்றும் இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் களத்தில் இருப்பதால் பலமுனைப் போட்டி நிலவுகிறது.

திமுக சார்பில் மதுராந்தகத்தில் இ.பரந்தாமனும், தாராபுரத்தில் எஸ்.சுகன்யாவும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, இடைத்தேர்தல் பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது. தாராபுரத்தில் தவெக தலைவர் மற்றும் முதல்வர் விஜய் இன்று சாலைப் பிரசாரம் மேற்கொள்கிறார்.

சபாநாயகரின் “இடைத்தேர்தலில் ஆளுங்கட்சி வெற்றி பெறுவது வழக்கம்” என்ற கருத்து, தற்போது நடைபெற உள்ள தாராபுரம் மற்றும் மதுராந்தகம் இடைத்தேர்தல் பிரசாரத்தின் இறுதிக்கட்டத்தில் அரசியல் கவனம் பெற்றுள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam