Enter your Email Address to subscribe to our newsletters

சிவகங்கை, 04 அக்டோபர் (ஹி.ச.)
சிவகங்கை மாவட்டம் கீழச்சலூர் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி வனிதா (27). இவர்களுக்கு ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், மூன்றாவது குழந்தைக்கான பிரசவத்திற்காக வனிதா கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தொடர்ந்து அக்டோபர் 2-ஆம் தேதி வனிதாவுக்கு பெண் குழந்தை பிறந்ததாக கூறப்படுகிறது.
பிரசவத்துக்குப் பிறகு வனிதாவுக்கு அதிகளவில் ரத்தப்போக்கு ஏற்பட்டதாகவும், இதையடுத்து அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இன்று காலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள்., வனிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி உடலை வாங்க மறுத்து மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த சிவகங்கை நகர் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மேலும், வனிதாவின் உயிரிழப்பு தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பிரசவத்துக்குப் பிறகு ஏற்பட்ட உடல்நலக் கோளாறு மற்றும் அதிக ரத்தப்போக்கு காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்து விசாரணைக்குப் பின்னரே முழுமையான தகவல் தெரியவரும். இச்சம்பவம் சிவகங்கை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / LOGESHWARI V