பக்தர்களிடம் கடுமையாக நடந்து கொண்ட ஶ்ரீ ரங்கம் கோயில் பணியாளர்- தற்காலிக பணிநீக்கம்!
ஶ்ரீரங்கம், 04 அக்டோபர் (ஹி.ச.) திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலுக்கு தரிசனத்திற்காக வந்த பக்தர்களிடம் கடுமையாக நடந்து கொண்டதாகக் கூறப்படும் கோயில் பணியாளர் ஒருவர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். புரட்டாச
Srirangam Temple


ஶ்ரீரங்கம், 04 அக்டோபர் (ஹி.ச.)

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலுக்கு தரிசனத்திற்காக வந்த பக்தர்களிடம் கடுமையாக நடந்து கொண்டதாகக் கூறப்படும் கோயில் பணியாளர் ஒருவர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

புரட்டாசி மாதம் மற்றும் காந்தி ஜெயந்தி விடுமுறையை முன்னிட்டு கடந்த 2ஆம் தேதி திருக்கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர். அப்போது, திருக்கோயில் பணியாளர் ப.சரவணகுமார் பக்தர்களிடம் கடுமையாக நடந்து கொண்டதாகக் காணப்படும் காணொளி சமூக வலைதளங்களில் பரவியது.

இதையடுத்து, திருக்கோயில் நிர்வாகம் உடனடியாக விசாரணை மேற்கொண்டது. அதில், சம்பந்தப்பட்ட பணியாளரின் நடத்தை திருக்கோயிலின் மாண்பிற்கும், பக்தர்களிடம் கடைப்பிடிக்க வேண்டிய மரியாதையான அணுகுமுறைக்கும் புறம்பாக இருந்தது உறுதி செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட பணியாளர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதுடன், அவரை தற்காலிக பணிநீக்கம் செய்து திருக்கோயில் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

திருக்கோயில்களுக்கு வருகை தரும் பக்தர்களை மரியாதையுடனும், கனிவுடனும் நடத்த வேண்டும் என பணியாளர்கள் அனைவருக்கும் ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், அந்த அறிவுறுத்தலுக்கு மாறாக செயல்பட்டதன் காரணமாகவே சம்பந்தப்பட்ட பணியாளர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் திருக்கோயில் இணை ஆணையர் / செயல் அலுவலர் செ.சிவராம்குமார் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P