வெற்றி பயண திட்டத்துக்கு எதிராக வழக்கு - சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை விசாரணை
சென்னை, 04 அக்டோபர் (ஹி.ச.) தமிழக அரசின் வெற்றி பயணம் திட்டத்துக்கு எதிராக, தனியார் பேருந்து உரிமையாளர் ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். பெண்கள் அரசு பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யும் வகையில் செயல்படுத்தப்பட்டுள்ள இத்த
Madras high court


சென்னை, 04 அக்டோபர் (ஹி.ச.)

தமிழக அரசின் வெற்றி பயணம் திட்டத்துக்கு எதிராக, தனியார் பேருந்து உரிமையாளர் ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

பெண்கள் அரசு பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யும் வகையில் செயல்படுத்தப்பட்டுள்ள இத்திட்டத்தால், தனியார் பேருந்து உரிமையாளர்கள் பாதிக்கப்படுவதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பெண்களுக்கான இலவச பேருந்து பயணத் திட்டம் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள நிலையில், அதன் விரிவாக்கமாக வெற்றி பயணம் திட்டம் அக்டோபர் 2-ஆம் தேதி தொடங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதன் மூலம் மாநிலம் முழுவதும் 12,600-க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்துக்கு எதிராக ஈரோட்டைச் சேர்ந்த தனியார் பேருந்து உரிமையாளர் கலாமணி என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில், பெண்களிடம் பேருந்துக் கட்டணம் வசூலிக்காமல் இலவச பயணம் வழங்கப்படுவதால், தனியார் பேருந்துகளின் பயணிகள் எண்ணிக்கையும் வருவாயும் பாதிக்கப்படும் என்றும், தனியார் பேருந்து உரிமையாளர்கள் நிதி இழப்பை சந்திக்கும் சூழல் உருவாகும் என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளார்.

மேலும், இத்திட்டத்தின் கீழ் பயணம் செய்யும் பயனாளிகளுக்கான கட்டணச் செலவாக ஆண்டுக்கு சுமார் ரூ.6,000 கோடியை அரசு ஏற்றுக்கொள்வதாக மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதே அடிப்படையில் தனியார் பேருந்துகளுக்கும் இழப்பீடு வழங்கி திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டும், அரசு அதை ஏற்கவில்லை என மனுதாரர் தெரிவித்துள்ளார்.

முதல்வரின் சட்டப்பேரவை அறிவிப்பின் அடிப்படையில் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ள நிலையில், இதற்கான அரசாணை பிறப்பிக்கப்படவில்லை என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, திட்டத்தை அரசியலமைப்புச் சட்டத்துக்கு முரணானது என அறிவிக்க வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.

மேலும், வழக்கு முடிவடையும் வரை ‘வெற்றி பயணம்’ திட்டத்துக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்றும் மனுதாரர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த மனு, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நாளை விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / LOGESHWARI V