துபாயில் பெட்ரோல் விலை விலை உயர்வு..!
துபாய், 04 அக்டோபர் (ஹி.ச.) ஐக்கிய அரபு அமீரகத்தில் அக்டோபர் மாதத்திற்கான பெட்ரோல் மற்றும் டீசல் விலை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், எரிபொருள் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. குறிப்பாக, பெட்ரோலின் விலை லிட்டருக்கு 4 திர்ஹாமை கடந்துள்ளதால், வாகன ஓட்
Dubai


துபாய், 04 அக்டோபர் (ஹி.ச.)

ஐக்கிய அரபு அமீரகத்தில் அக்டோபர் மாதத்திற்கான பெட்ரோல் மற்றும் டீசல் விலை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், எரிபொருள் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.

குறிப்பாக, பெட்ரோலின் விலை லிட்டருக்கு 4 திர்ஹாமை கடந்துள்ளதால், வாகன ஓட்டிகள் மத்தியில் இந்த விலை உயர்வு கவனத்தை ஈர்த்துள்ளது.

அக்டோபர் மாதத்திற்கான புதிய விலை விவரங்களின்படி, சூப்பர் 98 பெட்ரோல் விலை செப்டம்பர் மாதத்தில் லிட்டருக்கு 3.80 திர்ஹாமாக இருந்த நிலையில், தற்போது 4.40 திர்ஹாமாக உயர்த்தப்பட்டுள்ளது.

இந்திய ரூபாய் மதிப்பில் இது சுமார் ரூ.115.41 ஆகும்.

அதேபோல், ஸ்பெஷல் 95 மற்றும் இ-பிளஸ் 91 வகை பெட்ரோல்களின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. டீசல் விலையிலும் உயர்வு பதிவாகியுள்ளது.

ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது, சில வகை எரிபொருட்களின் விலை முந்தைய மாதத்துடன் ஒப்பிடும்போது குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரம் மற்றும் மத்திய கிழக்கில் தொடரும் பதற்றமான சூழல் ஆகியவை எரிபொருள் விலை மாற்றத்திற்கு முக்கிய காரணிகளாக பார்க்கப்படுகின்றன.

உலகளாவிய எண்ணெய் சந்தையில் ஏற்படும் மாற்றங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தின் உள்ளூர் எரிபொருள் விலையிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.

கடந்த சில மாதங்களாக எரிபொருள் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதனால், தினசரி வாகனப் பயணம் மேற்கொள்ளும் பொதுமக்கள் மற்றும் தனியார் வாகன உரிமையாளர்களின் செலவுகள் அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது.

எரிபொருள் விலை உயர்வைத் தொடர்ந்து, துபாயில் சிலர் தனியார் வாகனப் பயன்பாட்டைக் குறைத்து மெட்ரோ ரயில் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து வசதிகளை பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

எரிபொருள் விலை தொடர்ந்து உயரும் பட்சத்தில், பொதுப் போக்குவரத்துக்கான தேவை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Hindusthan Samachar / LOGESHWARI V