Enter your Email Address to subscribe to our newsletters

ஓசூர், 04 அக்டோபர் (ஹி.ச.)
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், சாலையோரம் துணி வியாபாரம் செய்து வந்த பெண்ணிடம் 4 பவுன் தங்கத் தாலிச் செயினைப் பறித்துவிட்டு தப்ப முயன்ற இளைஞரை பொதுமக்கள் விரட்டிப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் கப்பல்வாடி கிராமத்தைச் சேர்ந்த சத்யா (34), ஓசூர் பேருந்து நிலையத்தின் பின்புறம் சப்தகிரி லாட்ஜ் அருகே தள்ளுவண்டியில் துணி வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில், நேற்று மதியம் வழக்கம்போல் அவர் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது அங்கு வந்த இளைஞர் ஒருவர், சத்யாவின் கவனத்தை திசைதிருப்பியதாகவும், பின்னர் திடீரென அவரது கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்கத் தாலிச் செயினை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாகவும் கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த சத்யா சத்தமிட்டு உதவி கோரியுள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் திரண்டனர். பின்னர் செயினைப் பறித்துவிட்டு ஓடிய நபரை பொதுமக்கள் சிலர் துரத்திச் சென்று பிடித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஓசூர் நகர போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, பொதுமக்களிடம் சிக்கிய இளைஞரை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், பிடிபட்ட நபர் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியைச் சேர்ந்த அரவிந்தன் (22) என்பது தெரியவந்ததாக கூறப்படுகிறது. அவரிடம் இருந்து பறிக்கப்பட்ட 4 பவுன் தங்கத் தாலிச் செயினை போலீசார் மீட்டனர்.
இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார், அரவிந்தனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மக்கள் அதிகம் நடமாடும் பகுதியில் நடைபெற்ற இந்த சம்பவம் ஓசூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / LOGESHWARI V